Latestமலேசியா

இலங்கை பிரஜையை கடத்தும் ஏற்பாட்டில் ஈடுபட்டதாக பெண் உட்பட மூவர் மீது குற்றச்சாட்டு

கிள்ளான், ஆகஸ்ட் 7 – இலங்கை பிரஜையை கடந்த ஜூலை மாதம் 10 ஆம் தேதி கடத்த ஏற்பாடு செய்த குற்றச்சாட்டின் பேரில் ஒரு பெண் உட்பட மூவர் கிள்ளான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று நிறுத்தப்பட்டனர்.

நீதிபதி முகமது சப்ரி இஸ்மாயில் ( Mohd Sabri Ismail ) முன்னிலையில் தமிழில் ஒன்றாக வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டை புரிந்துகொண்டதற்கு அடையாளமாக மலேசியாவைச் சேர்ந்த 27 வயது பெண், 46 வயது ஆடவர் மற்றும் இலங்கையைச் சேர்ந்த 48 வயது நபரும் தலையசைத்தனர்.

KLIA அனைத்துலக விமான நிலையத்தின் முதலாவது முனையத்தின் வாயிலாக இலங்கை ஆடவரை கடத்த ஏற்பாடு செய்ததாக அந்த மூவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. 2007 ஆம் ஆண்டு ஆட்கடத்தல் தடுப்பு மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 26C யின் கீழ் இந்த குற்றச்சாட்டு அவர்கள் மீது கொண்டுவரப்பட்டது.

மேலும் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 34 உடன் சேர்த்து குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது. இந்த குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் கூடியபட்சம் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை , அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

மேலும் புலம்பெயர்ந்தோர் கடத்தலை எளிதாக்கும் நோக்கத்திற்காக வேறொருவரின் பெயரில் போலி கடப்பிதழை வைத்திருந்த குற்றச்சாட்டை 21 வயதுடைய இலங்கை ஆடவரான Antany Sujan Antany Ranjan செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார்.

எனினும் இந்த குற்றச்சாட்டுக்கள் உயர்நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டதாக இருப்பதால் குற்றஞ்சாட்டப்பட்டவர்களிடம் வாக்குமூலம் எதுவும் பதிவுசெய்யப்படவில்லை. இந்த வழக்கை ஷா அலாம் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்காக அரசு தரப்பு செய்து கொண்ட முறையீட்டை செஷன்ஸ் நீதிமன்றம் அனுமதித்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!