
கோலாலம்பூர், பிப்ரவரி-20 – MRSM எனப்படும் மாரா அறிவியல் இளநிலைக் கல்லூரியில் பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீடு குறைக்கப்படாது.
பூமிபுத்ரா அல்லாத மாணவர்களின் நுழைவு மிக மிகக் குறைவாக சுமார் 1 விழுக்காட்டு அளவிலேயே இருந்தாலும், அந்த 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் கை வைக்க மாட்டோம் என, மாரா தலைவர் டத்தோ Dr அஷ்ராஃப் வஜ்டி டுசுகி (Asyraf Wajdi Dusuki) கூறினார்.
இன்று நேற்றல்ல, அந்த இட ஒதுக்கீடு தொடங்கிய காலத்திலிருந்தே இதே நிலைமை தான்; என்றாலும், பூமிபுத்ராஅல்லாத மாணவர்களை மாரா எப்போதும் வரவேற்பதாக அவர் சொன்னார்.
கல்வி வாயிலாக ஒற்றுமையை நிலைநாட்டிட, MRSM கல்லூரிகளில் பல்லின மக்களின் பங்கேற்பு அவசியமென்றார் அவர்.
எனினும், இவ்வாண்டு MRSM கல்லூரிகளில் பூமிபுத்ரா அல்லாத மாணவர்களின் பதிவு ஊக்கமளிக்கும் வகையில் இருக்குமென அஷ்ராஃப் நம்பிக்கைத் தெரிவித்தார்.
புதியக் கல்வியாண்டுக்கான நேற்றைய பதிவில் அதற்கான அறிகுறிகள் தென்பட்டது; முன்பெல்லாம் 30 முதல் 40 விழுக்காட்டினர் வாய்ப்புக் கிடைத்தும் வர மாட்டார்கள்; ஆனால் நேற்று சுங்கை பெசார் MRSM-மில் 20 பேர் மட்டுமே பதிய வரவில்லை என அவர் சொன்னார்.
அறிவியல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பூமிபுத்ரா நிபுணர்களை உருவாக்கும் நோக்கில் 1972-ஆம் ஆண்டு இந்த MRSM கல்லூரிகள் அமைக்கப்பட்டன.
எனினும், 2002-ஆம் ஆண்டு முதல் அக்கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டு, 10 விழுக்காட்டு இடங்கள் பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.