Latestமலேசியா

இவ்வாண்டு RM98.6 மில்லியன் செலவில் 12 சமூகப் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு மித்ரா அங்கீகாரம்

கோலாலம்பூர், டிசம்பர்-4 – மலேசிய இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவான மித்ரா இவ்வாண்டு 98.6 மில்லியன் ரிங்கிட் நிதியில், 12 திட்டங்களை அங்கீகரித்துள்ளது.

அவை, 119,094 பேர் நன்மையடையக் கூடியத் திட்டங்கள் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார்.

600 தொழில்முனைவர்களைக் குறி வைக்கும் மலேசிய இந்தியச் சமூக தொழில்முனைவோர் திட்டம், B40 குடும்பங்களைச் சேர்ந்த 4,709 குழந்தைகளுக்கான தனியார் பாலர் பள்ளி மானியத் திட்டம், உள்நாட்டு உயர் கல்விக் கூடங்களில் பயிலும் B40 குடும்பங்களைச் சேர்ந்த 12,400 முதலாம் மற்றும் இரண்டாமாண்டு மாணவர்களுக்கான நிதி உதவி உள்ளிட்டவையும் அத்திட்டங்களில் அடங்கும்.

தவிர, 600 சிறுநீரக நோயாளிகளுக்கு டையாலிசிஸ் சிகிச்சைக்கான மானிய உதவித் திட்டம், 80,000 தமிழ்ப் பள்ளி மாணவர்கள் மற்றும் இடைநிலைப் பள்ளிகளில் பயிலும் இந்திய மாணவர்களுக்கான இணையப் பாதுகாப்பு விழிப்புணர்வுத் திட்டம் உள்ளிட்டவையும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

மித்ரா செலவிட்ட 97 மில்லியன் ரிங்கிட்டுக்கு, விரிவாகக் கணக்குக் காட்டுமாறு மேலவையில் செனட்டர் டத்தோ சிவராஜ் சந்திரன் கேட்ட கேள்விக்கு பிரதமர் அவ்வாறு பதிலளித்துள்ளார்.

செலவிட்ட நிதியால் விளைந்த நன்மைகள் குறித்து சமூகத் தாக்க ஆய்வுகள் ஏதும் நடத்தப்பட்டதா? அப்படி நடத்தப்பட்டால் அதனறிக்கை எப்போது தாக்கல் செய்யப்படுமென்றும் சிவராஜ் கேட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்த டத்தோ ஸ்ரீ அன்வார், 2021 முதல் 2023 வரை மேற்கொள்ளப்பட்ட இந்தியச் சமூகப் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து மலாயாப் பல்கலைக்கழக ஒத்துழைப்புடன் மித்ரா ஆய்வு மேற்கொள்ளுமென்றார்.

வரும் ஜனவரி தொடங்கி 12 மாதங்களுக்கு அந்த ஆய்வு நடைபெறும்.

இதற்கு முந்தைய ஆண்டுகளில் மித்ரா செயல்படுத்தியத் திட்டங்களால் விளைந்த நன்மைகள் ஆராயப்படும்;

2026- தொடக்கத்தில் அந்த ஆய்வறிக்கை வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் பிரதமர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!