
கோலாலம்பூர், டிசம்பர்-6 – சிலாங்கூர், கிள்ளான், பண்டார் பொத்தானிக்கில் கம்யூனிச கலாச்சாரத்தை விளம்பரப்படுத்துவதாகக் கூறப்பட்ட பார்பிக்யூ உணவகத்தை நேற்று முன்தினம் போலீஸ் முற்றுகையிட்டது.
உணவு மற்றும் பானங்களைப் பரிமாறும் உபகரணங்களில் கம்யூனிஸ்ட் தலைவர்களின் படங்கள் அச்சிடப்பட்டிருப்பதாக வெளியான தகவல்ளை அடுத்து, அந்த அதிரடிச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
யூ டியூப்பில் வைரலான ஒரு வீடியோவை ஆதாரமாகக் கொண்டு வேவு பார்த்து, ஜாலான் காசுவாரினா 6-ல் அமைந்துள்ள அவ்வுணவத்தில் தென் கிள்ளான் போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத் துறை சோதனையில் இறங்கியது.
அச்சோதனையில் உணவகத்தின் நிர்வாகியான 20 வயது ஆடவர் கைதானதாக தேசியப் போலீஸ் படைத் தலைவர் தான் ஸ்ரீ ரசாருடின் ஹுசாய்ன் கூறினார்.
சீன மொழி எழுத்துகளோடு, சீன கம்யூனிஸ்ட் தலைவர் மறைந்த மாசேதுங் (Mao Zedong) மற்றும் அவரின் கூட்டாளிகள் முகம் பொறிக்கப்பட்ட பீங்கான் தண்ணீர் ஜக்குகள், பீங்கான் குவளைகள், சூப் குடிக்கும் பீங்கான் கரண்டிகள், மற்றும் கட்டண இரசீதுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
உணவகத்தில் பயன்படுத்த ஏதுவாக, சீனாவிலிருக்கும் இணை உரிமையாளரால் அந்த உபகரணங்கள் வாங்கப்பட்டதாக கைதான சந்தேக நபர் போலீசிடம் கூறியுள்ளார்.
மேல் விசாரணைக்காக அவர் 2 நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இவ்வேளையில் அவ்வீடியோவை யூ டியூபில் பதிவேற்றிய luiswong90 எனும் கணக்கின் உரிமையாளர் பற்றி, தொடர்பு-பல்லூடக ஆணையமான MCMC-யிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது.