
செப்பாங், அக்டோபர்-5,
இஸ்ரேலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 23 மலேசியத் தன்னார்வலர்களும், பாதுகாப்பாக துருக்கியே தலைநகர் இஸ்தான்புல் சென்றடைந்துள்ளனர்.
செப்பாங்கில் உள்ள Sumud Nusantara கட்டுப்பாட்டு மையம் அதனை உறுதிப்படுத்தியது.
இஸ்ரேலின் ரமோன் விமான நிலையத்திலிருந்து நேற்று மாலை 6.40க்கு புறப்பட்டு, இஸ்தான்புல் சென்றடைந்தவர்களை, மலேசிய தூதரக அதிகாரிகள் மற்றும் துருக்கியே அரசாங்க பிரதிநிதிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
36 துருக்கியே பிரஜைகள் உட்பட மொத்தமாக 137 தன்னார்வலர்கள், துருக்கியே அரசாங்கத்தின் ஏற்பாட்டில் Turkish Airlines விமானத்தில் கொண்டு வரப்பட்டனர்.
இஸ்தான்புலில் தங்கி ஓய்வு எடுத்த பின், திங்கட்கிழமை வாக்கில் மலேசியத் தன்னார்வலர்கள் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தங்குமிட வசதியை வழங்கி, தன்னார்வலர்களின் சோர்வை நீக்கி, புத்துணர்ச்சியுடன் மலேசியாவுக்கு அனுப்பி வைக்க துருக்கியே அரசு முழு சிரத்தை எடுத்துள்ளது.
இந்நிலையில், அவர்கள் பாதுகாப்பாக விடுவிக்கப்படுவதை சாத்தியமாக்கிய பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், துருக்கியே அதிபர்
Recep Tayyip Erdoğan, ஜோர்டான் மற்றும் அமெரிக்க அரசுகளுக்கும், Sumud Nusantara நன்றியைத் தெரிவித்தது.
மனிதநேய உதவிகளை ஏற்றிக் கொண்டு பன்னாட்டு தன்னார்வலர்களுடன் காசாவை நோக்கி மேற்கொள்ளப்பட்ட Global Sumud Flotilla கப்பல் பயணத்தின் போது இச்சம்பவம் நிகழ்ந்தது.