லீமா, நவம்பர்16 – இஸ்ரேலை தாம் அங்கீகரித்ததாக பொய் பிரச்சாரம் செய்வோரை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடுமையாகச் சாடியுள்ளார்.
மக்களை முட்டாளாக்கும் ஒரு பொறுப்பற்றச் செயல் அதுவென வருணித்த பிரதமர், சமயம் என்ற போர்வையில் இப்படித்தான் உண்மைக்குப் புறம்பாக பேசுவீர்களா என சம்பந்தப்பட்டோரை பார்த்துக் கேட்டார்.
APEC நாடுகளின் உச்ச நிலை மாநாட்டில் பங்கேற்கச் சென்றுள்ள அன்வார் அங்கு மலேசிய செய்தியாளர்களிடம் அவ்வாறு கூறினார்.
வெளிநாட்டு தொலைக்காட்சியுடனான நேர்காணலில் இஸ்ரேலை அன்வார் அங்கீகரித்ததாக முன்னதாக பேச்சு கிளம்பியது.
அதனைத் தெளிவுப்படுத்தியப் பிரதமர், இஸ்ரேல் என ஒன்று இருப்பதை ஒப்புக் கொள்கிறேன் எனக் கூறினேனே தவிர, அதனை அங்கீகரிப்பதாகக் கூறவில்லை என்றார்.
அப்பாவி பாலஸ்தீன மக்களைக் கொன்று குவிக்கும் ஒரு அரசாங்கத்தை எப்படி அங்கீகரிக்க முடியும்? அண்மையில் கூட ஐநா அமைப்பிலிருந்தே இஸ்ரேலை நீக்க வேண்டுமென தாம் வலியுறுத்தியதை பிரதமர் சுட்டிக் காட்டினார்.
பொருளாதார ஒத்துழைப்பு மாநாடான APEC-கில் கூட மலேசியா பாலஸ்தீன விவகாரத்தை எழுப்பியுள்ளது.
எனவே, தீய நோக்கத்தில் தனது கருத்தைத் திரித்து கூறி மலிவு விளம்பரம் தேட வேண்டாமென சம்பந்தப்பட்ட தரப்புகளை டத்தோ ஸ்ரீ அன்வார் நினைவுறுத்தினார்.