
ஈப்போ,கம்பார், தாப்பாவில் மீண்டும் விசித்திரமான சத்தம்
ஈப்போவின் சில பகுதிகளிலும், கம்பார், தாப்பா மற்றும் தெலுக் இந்தான் உள்ளிட்ட பல சுற்றியுள்ள மாவட்டங்களிலும் இன்று அதிகாலையில் மீண்டும் உரத்த, விவரிக்க முடியாத வெடிப்பு சத்தங்கள் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. நேற்று இரவு மணி 11.50 முதல் இன்று அதிகாலை வரை இந்த சத்தங்கள் கேட்கப்பட்டதோடு இந்த விவகாரம் முகநூலிலும் வைரலாகியதோடு இது தொடர்பாக பல்வேறு கருத்துகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஜூன் 18 ஆம் தேதி இத்தகைய சம்பவம் ஒன்று இதே பகுதிகளில் பதிவாகியபோதிலும் அதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.இன்று நண்பகல்வரை இந்த சம்பவம் தொடர்பாக எந்தவொரு அதிகாரப்பூர்வ புகாரும் கிடைக்கவில்லையென பேரா கனிம மற்றும் புவியியல் அறிவியல்துறையின் இயக்குநர் நிஷருலிக்ராம் அப்துல் ரஹிம் ( Nizaulikram Abdul Rahim ) கூறினார்.
ஆனால் விசித்திரமான அந்த சத்தம் நள்ளிரவில் அல்லது அதிகாலையில் நடந்ததால், அது கல்லுடைப்பு நடவடிக்கைகளிலிருந்து தோன்றியிருக்க முடியாது என்று அவர் தெரிவித்தார். மெட்மலேசியாவின் நில அதிர்வு கண்காணிப்பு கருவிகளும் ஈப்போ அல்லது கம்பாரில் நில அதிர்வுகளை ஏற்படுத்தக்கூடிய எந்த செயல்பாட்டையும் கண்டறியவில்லை என்றும் அவர் கூறினார்.



