
வாஷிங்டன், ஏப்ரல்-30-ஈரான் புதிய அணுசக்தி ஒப்பந்தத்திற்குச் சம்மதிக்கும் வரை Hormuz நீரிணையில் விதிக்கப்பட்டுள்ள கடற்படை முற்றுகையை நீக்கப்போவதில்லை என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
இந்த முற்றுகையால் ஈரானின் பொருளாதாரம் கடும் நெருக்கடியில் இருப்பதைச் சுட்டிக்காட்டிய டிரம்ப், அவர்கள் “திணறிக்கொண்டிருக்கிறார்கள்” என்று ஏளனமாகக் கூறினார்.
பேச்சுவார்த்தைக்கு முன்னதாகவே கடல்வழிப் பாதையைத் திறக்க வேண்டும் என்ற ஈரானின் கோரிக்கையை அவர் திட்டவட்டமாக நிராகரித்தார்.
தாக்குதல் நடத்துவதை விட இந்த முற்றுகையே அதிக பலன் தருவதாக அவர் கருதுகிறார்.
இதற்கிடையில், இந்த முட்டுக்கட்டை நீடித்தால் ஈரானின் உள் கட்டமைப்புகள் மீது “குறுகிய மற்றும் சக்திவாய்ந்த” தாக்குதல்களை நடத்த அமெரிக்க இராணுவம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமது Truth Social சமூக ஊடகத் தளத்தில் துப்பாக்கி ஏந்தியவாறு AI படத்தைப் பதிவிட்ட ட்ரம்ப், “இனி அமைதியாக இருக்க முடியாது” என்பதைக் குறிக்கும் வகையில் ‘No more Mr. Nice Guy’ என பதிவிட்டு எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு விரைவில் “முன்னெப்போதும் இல்லாத பதிலடி” கொடுக்கப்படும் என ஈரான் பாதுகாப்புத் துறையும் தன் பங்கிற்கு எச்சரித்துள்ளது.
உலகின் மிக முக்கியமான எண்ணெய் விநியோகப் பாதையில் நிலவும் இந்த மோதல் போக்கால், அனைத்துலகச் சந்தையில் பதற்றம் தொடருகிறது.



