கோலாலம்பூர், ஜன 9 – கடத்தல் முயற்சிகளைத் தடுக்க முகபாவனைகள் மற்றும் உடல் மொழி பாவணைகளை கண்டறிந்து ஆய்வு செய்வதற்கு திறமையான அதிகாரிகளை சுங்கத்துறை நியமிக்கவிருக்கிறது.
இந்த ஆண்டு NLP எனப்படும் நரம்பியல் மொழியியல் நிரலாக்க படிப்பின் மூலம் இது செயல்படுத்தப்படும் என்று சுங்கத்துறை தலைமை இயக்குநர் டத்தோ அனிஸ் ரிசானா முகமட் ஜைனுடின்
(Anis Rizana Mohd Zainudin) கூறினார்.
நாடு முழுவதும் 30 பணியாளர்கள் இந்த பயிற்சியை பெற்றுள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான நபர்களை குறிப்பாக கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை அடையாளம் காணும் திறன்களை அதிக பணியாளர்கள் பெற்றிருப்பதற்காக இந்த திட்டத்தை விரிவுபடுத்த முடியும் என நாங்கள் நம்புகிறோம் என்று அனிஸ் தெரிவித்தார்.
செயற்கை நுண்ணறிவு (AI) அம்சங்களுடன் கூடிய 40 அதிநவீன பரிசோதனை கருவியான ஸ்கேனர்களை சுங்கத்துறை வாங்கியுள்ளது.
இந்த கருவிகள் நாடு முழுவதும் உள்ள பல்வேறு நுழைவுப் மையங்களில் வைக்கப்பட்டுள்ளதோடு ,
100 விழுக்காடு துல்லியத்துடன் 20 அல்லது 30 வினாடிகளுக்குள் பொருட்களை பரிசோதனை செய்யும் திறன் கொண்ட ஆற்றலை அவை கொண்டுள்ளன.
இவற்றின் மூலம் ஏற்கனவே சட்டவிரோத சிகரெட்டுகள், போதைப்பொருள்கள் மற்றும் மதுபானங்களை கடத்துவதற்கான பல முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளன. கடத்தல்காரர்கள், குறிப்பாக போதைப்பொருள் விநியோகிப்பாளர்கள் , தற்போது தங்கள் செயல் முறையை மாற்றிக் கொண்டு, தற்போது கூரியர் சேவைகளைப் பயன்படுத்துகின்றனர் என்று அனிஸ் கூறினார்.
மேலும் நுழைவு மையங்களில் AI – இயக்கப்பட்ட உடல் அணிந்த கேமராக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் சுங்கத்துறை திட்டமிட்டுள்ளது.