
கோலாலம்பூர், ஆகஸ்ட்-6 – உட்புறப் பகுதிகளில் வேலை செய்யும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் அலவன்ஸ் தொகைகளை மறுபரிசீலனை செய்ய அரசாங்கம் இப்போதைக்கு திட்டமிடவில்லை என கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சிடேக் கூறியுள்ளார்.
புத்ராஜெயாவின் தற்போதைய கவனம் ஒட்டுமொத்த அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதிலும், ஆசிரியர்களின் தொழில்முறை மற்றும் நலனை மேம்படுத்துவதற்கான பிற நடவடிக்கைகளிலும் தான் என்றார் அவர்.
உட்புறங்களில் உள்ள ஆசிரியர்கள் தற்போது தங்கள் பள்ளிகளுக்குச் செல்ல எவ்வளவு தூரம் பயணிக்க வேண்டும் என்பதைப் பொறுத்து RM500, RM1,000 அல்லது RM1,500 அலவன்ஸ் தொகையைப் பெறுகிறார்கள்.
கடந்தாண்டு டிசம்பர் 1 முதல் பொது சேவை ஊதிய முறையை செயல்படுத்துவதன் மூலம் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசாங்கம் ஏற்கனவே எடுத்துள்ளது.
தேசிய கல்வி முறைக்கு அவர்களின் பங்களிப்புகளை அங்கீகரிப்பதில் ஆசிரியர்கள் உட்பட அரசு ஊழியர்களின் நலனை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சியின் ஒரு பகுதியே அதுவென, மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் அமைச்சர் கூறினார்.
என்ற போதிலும்,
பொருளாதார நிலைமை மற்றும் அரசாங்கத்தின் நிதி நிலைமைகளின் அடிப்படையில் எந்தவொரு மாற்றமும் செய்யப்பட வேண்டியதன் அவசியத்தை தனது அமைச்சு மதிப்பிடும் என்று ஃபாட்லீனா சொன்னார்.
ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் தங்கள் கடமைகளையும் பொறுப்புகளையும் சிறப்பாகச் செய்ய உதவும் வகையில், பணமில்லா சலுகைகள் வழங்கும் பரிந்துரைகளையும் அமைச்சு திறந்த மனதோடு வரவேற்கும் என்றார் அவர்.