
உத்தரப் பிரதேசம், பிப்ரவரி 20 – உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது திடீரென தேனீக்கள் கூட்டமாக தாக்கியதில் 65 வயதுடைய கிரிக்கெட் போட்டியின் நடுவர் பரிதாபமாக உயிரிழந்தார். அச்சம்பவத்தில் பலரும் காயமடைந்து அருகாமையிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அந்த திடீர் தாக்குதலால் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் பதற்றத்துடன் ஓடி உயிர் தப்பினர்.
தீவிரமாக காயமடைந்த நடுவர் முதலில் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனலிக்காமல் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
உயிரிழந்த அந்த நடுவர் சுமார் 30 ஆண்டுகளாக உள்ளூர் கிரிக்கெட் சங்கத்துடன் இணைந்து பல முக்கிய போட்டிகளில் நடுவராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று, கடந்த 2019ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் நடந்த கிரிக்கெட் போட்டி தேனீக்கள் தாக்குதலால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அப்போது பலர் காயமடைந்தாலும் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.



