
உயர்ந்த வருமானம் இருந்தும், PTPTN கடனைக் கட்ட தவிர்பவர்களுக்கே வெளிநாட்டு பயணத் தடை
கோலாலம்பூர், பிப்ரவரி 10 –
PTPTN கல்விக் கடனைச் செலுத்தாமல் இருப்பவர்களில், நல்ல சம்பளம் பெறுபவர்கள் அல்லது வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் மீது மட்டுமே வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்படும் என்று மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கை அனைவருக்கும் பொருந்தும் விதிமுறை அல்ல மாறாக படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி வருபவர்கள், வேலை இல்லாதவர்கள் மற்றும் குறைந்த, நடுத்தர வருமானம் உள்ளவர்கள் மீது இந்தத் தடை விதிக்கப்படாது என்று உயர்கல்வி துணை அமைச்சர் Adam Adli Abdul Halim கூறினார்.
மேலும், PTPTN கடன் பெற்றவர்களுக்கு உதவ அரசு பல தளர்வுகளையும் வழங்கி வருகிறது. படிப்பு முடிந்த பின் கடனைத் திருப்பிச் செலுத்த 12 மாத அவகாசம் வழங்கப்படுகிறது. வேலை இல்லாதவர்கள் இரண்டு ஆண்டுகள் வரை கட்டணத்தைச் செலுத்தாமல் இருக்கலாம் என்றும் தவணை செலுத்த முடியாதவர்கள் 60 வயது வரை கடன் கட்டணத்தை மாற்றி அமைத்துக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் மேல்படிப்பு தொடர்வோருக்கும் கட்டணத் தள்ளிவைப்பு வழங்கப்படுகின்றது.
இதுவரை 77.5 பில்லியன் ரிங்கிட் அளவிலான PTPTN நிதி வழங்கப்பட்டு, 42.6 லட்சம் மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர். இதேபோல், e-Kasih கல்வி உதவித் தொகை பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 10,000-ஆக உயர்த்தப்படுவதோடு, அரசு உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் 3,000 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இலவச கல்வியும் வழங்கப்படவுள்ளது.
இதற்கிடையில், மாரான் சட்ட மன்ற உறுப்பினர் Datuk Seri Ismail Abd Muttalib, வேலை கிடைக்காத நிலையில் PTPTN கடனைச் செலுத்த முடியாமல் வெளிநாட்டு பயணத் தடையைச் சந்திக்கும் பட்டதாரிகளுக்கும், போதிய நிதி இல்லாத குறைந்த வருமானத்தைக் கொண்ட மாணவர்களுக்கும் அரசு என்ன உதவி செய்கிறது என்ற கேள்வியை எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.



