
பினாங்கு, ஆக 7 – பினாங்கு மாநிலத்தின் 28 தமிழ் பள்ளிகளில் கல்வித் தரத்தை மேலும் மேம்படுத்தும் நோக்கில், மாணவர்களுக்கு இலவச டேப்லெட்கள் வழங்கும் புதிய முயற்சியை மாநில தமிழ் பள்ளிகள் சிறப்புக் குழு அறிமுகப்படுத்தியுள்ளது.
பினாங்கு மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினரும், மாநில தமிழ் பள்ளிகள் சிறப்புக் குழுத் தலைவருமான டத்தோஸ்ரீ சுந்தரராஜூ சோமு, கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகளின் கல்வித் தரம், கட்டமைப்பு வசதிகள் மற்றும் டிஜிட்டல் கற்றல் சூழலை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
அதன் தொடர்ச்சியாக, பினாங்கு மாநில தமிழ் பள்ளிகள் சிறப்புக் குழுவின் துணைத் தலைவர் ஒய்.பி. குமரன் கிருஷ்ணன் முன்மொழிந்த யோசனையின் அடிப்படையில், முதல்கட்டமாக 130 டேப்லெட்கள் மாநிலத்தின் அனைத்து 28 தமிழ் பள்ளிகளுக்கும் வழங்கப்படவுள்ளன. இந்த டேப்லெட்கள் மூலம் மாணவர்கள் மின் நூல்கள், கல்வி செயலிகள், காணொளிப் பாடங்கள், செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த கற்றல் வளங்கள் உள்ளிட்ட நவீன கல்வி வசதிகளை எளிதில் பயன்படுத்த முடியும்.
இதனுடன், தேசிய மொழித் திறனை மேம்படுத்தும் நோக்கில், இதுவரை ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்ட “Mempersiapkan Bahasa Malaysia” என்ற நூல், இனி நான்காம் மற்றும் ஐந்தாம் ஆண்டு மாணவர்களுக்கும் வழங்கப்படவுள்ளதாக டத்தோஸ்ரீ சுந்தரராஜூ அறிவித்தார்.
மேலும், தமிழ் பள்ளிகளுக்கான திட்டங்களை செயல்படுத்தும் ஒப்பந்ததாரர்கள், பயிற்றுநர்கள் மற்றும் சேவை வழங்குநர்களுக்கு அதிகாரப்பூர்வ ஒப்பந்தங்கள் வழங்கப்படவுள்ளன. இதன் மூலம் அனைத்து திட்டங்களும் வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு மற்றும் திட்டமிட்ட நிர்வாகத்தின் அடிப்படையில் செயல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.
பள்ளிகளின் தேவைகளை தொடர்ந்து ஆய்வு செய்து, காலத்திற்கேற்ற புதிய கல்வித் திட்டங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம், பினாங்கு தமிழ் பள்ளிகளை நவீன, போட்டித்திறன் மிக்க கல்வி நிலையங்களாக மாற்றும் பணிகள் தொடரும் என்றும் டத்தோஸ்ரீ சுந்தரராஜூ சோமு உறுதியளித்தார்.



