
கோலாலம்பூர், ஆகஸ்ட்-28 – மலேசியக் குடியுரிமைப் பெற்ற உயர் கல்விக் கூட மாணவர்களுக்கான 100 ரிங்கிட் மடானி புத்தகப் பற்றுச்சீட்டு திட்டம் இன்று தொடங்குகிறது.
டிசம்பர் 12 வரை விநியோகம் செய்யப்படவிருக்கும் இப்பற்றுச்சீட்டுகள், அரசாங்கப் பல்கலைக்கழக, பாலிடெக்னிக் கல்லூரி, சமூகக் கல்லூரி மற்றும் தனியார் உயர் கல்விக் கூடங்களைச் சேர்ந்த 500,000 மாணவர்களுக்கு பயனளிக்கும்.
மாணவர்களின் கல்வித் தேவைகளைப் பூர்த்திச் செய்யும் அதே வேளை, அவர்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் நோக்கிலும் மடானி அரசாங்கம் இதனைச் செயல்படுத்துவதாக, உயர் கல்வி அமைச்சு தெரிவித்தது.
அதோடு மாணவர்கள் மத்தியில் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதையும், புத்தகத் தொழில்துறையை சுறுசுறுப்பாக்குவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
கூடுதல் பாட புத்தகங்கள், மீள்பார்வை நூல்கள் உட்பட பல்வேறு புத்தகங்களை https://mysiswaplace.my/ (MySiswaPlace) என்ற இணையத்தளத்தில் மாணவர்கள் வாங்க முடியும்.
இதில் 1 மில்லியனுக்கும் மேற்பட்ட சாதாரண நூல்களும் மின்னியல் புத்தகங்களும் உள்ளன.
இந்தப் புத்தகப் பற்றுச்சீட்டுத் திட்டத்தை உயர் கல்விக் கூட மாணவர்களுக்கும் விரிவுப்படுத்திய பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிக்கு அமைச்சு இவ்வேளையில் நன்றித் தெரிவித்துக் கொண்டது.