
வாஷிங்டன், ஜூலை-31- அமெரிக்கப் பொருட்களுக்கு உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடாக உள்ள இந்தியாவுக்கு, 25 விழுக்காடு வரியை விதிப்பதாக அதிபர் டோனல்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இந்தியா நட்பு நாடாக இருந்தாலும் பல ஆண்டுகளாகவே அமெரிக்காவுடனான அதன் வாணிபம் குறைவாகவே உள்ளது.
மாறாக, ரஷ்யாவிடமிருந்து ஏராளமான பொருட்களை அது வாங்குகிறது. குறிப்பாக, யுக்ரேனில் போரை நிறுத்த உலக நாடுகளே முனையும் நேரத்தில், ரஷ்யாவிடமிருந்து இராணுவத் தளவாடங்களையும் எரிசக்தியையும் இந்தியா வாங்குகிறது.
இதெல்லாம் நல்லதுக்கு அல்ல. “எனவே, எல்லாவற்றுக்கும் சேர்த்து ஓர் அபராதமாக இந்தியப் பொருட்களுக்கு இந்த 25 விழுக்காட்டு வரியை விதிக்கிறேன்; நாளை ஆகஸ்ட் 1 முதல் இது அமுலுக்கு வருகிறது” என தனது Truth Social சமூக ஊடகத் தளத்தில் ட்ரம்ப் பதிவிட்டார்.
இவ்வேளையில், அறிவிக்கப்படாத இன்னோர் அபராத விதிப்புக்கும் நாளை இந்தியா ஆளாகும்; ஆனால் அதன் அளவு குறித்தோ அது எதற்காக என்பது குறித்தோ ட்ரம்ப் கருத்துரைக்கவில்லை.
ட்ரம்பின் இந்த 25 விழுக்காடு வரி விதிப்பு, இந்தியா-அமெரிக்கா இடையே மாதக்கணக்கில் நடைபெற்ற பல கட்ட வாணிப பேச்சுவார்த்தைகளை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.
ஜவுளிகள், மருந்துகள், இரத்தினங்கள், நகைகள் உள்ளிட்ட அமெரிக்காவுக்கான புது டெல்லியின் பொருட்கள் ஏற்றுமதியை இந்த 25% வரி கடுமையாகப் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.