Latestமலேசியா

உள்ளூர் இந்திய வியாபாரிகளைப் பாதுகாக்கும் கொள்கையைத் தற்காக்கும் பினாங்கு முதல்வர்

ஜோர்ஜ்டவுன், ஜூலை-21- பினாங்கு மாநிலத்தைச் சேராத வியாபாரிகள், அனுமதிக்கப்பட்ட மாதங்களுக்கு வெளியே இந்தியக் கலாச்சார பொருட்களை விற்பதைக் கட்டுப்படுத்தும் விதிமுறையை, மாநில முதல்வர் சௌ கோன் இயோவ் (Chow Kon Yeow) தற்காத்து பேசியுள்ளார்.

அதுவொன்றும் நீதி மறுக்கும் செயல் அல்ல; மாறாக, நியாயமற்ற போட்டிகளிலிருந்து உள்ளூர் வியாபாரிகளைப் பாதுகாக்கும் நோக்கத்தைக் கொண்டதென அவர் சொன்னார்.

இந்த விதிமுறை கடந்த ஐந்தாண்டுகளாகவே அமுலில் உள்ளது;

அதை விட முக்கியம், பினாங்கு இந்திய வணிகர் சங்கத்தின் கோரிக்கையைத் தொடர்ந்தே இது அமல்படுத்தப்பட்டது என்றார் அவர்.

உள்ளூர் வியாபாரிகளுக்கு தீபாவளிக்கு மட்டுமே நல்ல விற்பனை கிடைக்கிறது; இந்நிலையில் வெளியார் நடத்தும் ‘திடீர்’ தீபாவளிச் சந்தைகளால் அந்த வியாபாரமும் ‘படுத்து விடுவதை’ சுட்டிக் காட்டி அச்சங்கம் அக்கோரிக்கையை முன்வைத்திருந்தது.

தவிர, இந்த ‘திடீர்’ விற்பனைகள் உரிய அனுமதிகள் மற்றும் வரிவிதிப்புகளை பின்பற்றவில்லை என்றும், சில நேரங்களில் பினாங்கு மக்களை பினாமியாகப் பயன்படுத்தி வெளியூர் நிறுவனங்கள் வணிகம் செய்வதாகவும் முதல்வர் கூறினார்.

அதற்காக, வெளியூர் வியாபாரிகள் முற்றிலும் தடை செய்யப்படவில்லை; பிப்ரவரி முதல் மே வரை அல்லது மாநகர மன்றம் அனுமதிக்கும் போது விற்பனை செய்யலாம் என அவர் தெளிவுப்படுத்தினார்.

ஜூலை 9-ஆம் தேதியன்று புக்கிட் மெர்தாஜாமில் உள்ள பேரங்காடியில் நடந்த ஓர் இந்தியக் கலாச்சார விற்பனை சந்தையில், அமுலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட வீடியோ வைரலானதைத் தொடர்ந்து இந்த விவகாரம் பூதாகரமானது.

கோலாலம்பூரிலிருந்து வந்திருந்த வியாபாரிகள், தங்களிடம் முறையான பெர்மிட் இருந்தும், தாங்கள் இந்நாட்டு குடிமக்கள் என்ற போதும், சம்மன்கள் வழங்கப்பட்டதால் குழப்பமடைந்தனர்.

இதையடுத்து, பத்து ஊபான் சட்டமன்ற உறுப்பினர் A.குமரேசன், நகராண்மைக் கழக
முன்னாள் உறுப்பினர் டேவிட் மார்ஷல் உள்ளிட்டோர், இந்த விதிமுறை சட்டப்பூர்வமானதா என்ற கேள்வியையும், பினாங்கு மாநிலம் சமத்துவ வாணிபத்தை ஆதரிக்கிறதா என்ற சந்தேகத்தையும் எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!