
புத்ராஜெயா, மே-25-மலேசியப் ஒலி-ஒளிபரப்புத் துறையின் ஆக உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும், 37-ஆவது ‘ஸ்ரீ அங்காசா விருதுகள் 2026’-ருக்கான அதிகாரப்பூர்வ விண்ணப்பப் படிவங்கள் வரும் ஜூன் 4-ஆம் தேதி முதல் திறக்கப்படவுள்ளன.

இவ்விவரங்களை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட தொடர்புத் துறை துணையமைச்சர் தியோ நீ சிங், வரும் ஜூன் 22-ஆம் தேதி வரை தகுதியான நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்றார்.
_”இங்கிருந்தே அனைத்தும் தொடங்குகிறது”_ (Segalanya Bermula Di Sini) என்ற கருப்பொருளில் உருவாகியுள்ள இவ்விருது விழா, மலேசிய வானொலித் துறையின் தொடக்கம் முதல் இன்றைய நவீன டிஜிட்டல் ஊடகப் பரிணாமம் வரையிலான பயணத்தைப் பறைசாற்றுகிறது.
இம்முறை 40 தொலைக்காட்சிப் பிரிவுகள், 17 வானொலிப் பிரிவுகள், 3 புதிய ஊடகப் பிரிவுகள் மற்றும் 2 நடுவர் சிறப்பு விருதுகள் என மொத்தம் 62 பிரிவுகள் போட்டியிடப்படவுள்ளன.
கடந்த 2024 ஜனவரி 1 முதல் 2025 டிசம்பர் 31-ஆம் தேதி வரை, உரிமம் பெற்ற மலேசிய ஊடகங்களில் முதன்முறையாக ஒளிபரப்பப்பட்ட படைப்புகள் மட்டுமே இதற்குத் தகுதியானவையாகும்.
இதன் உச்சக்கட்டமாக, முதன்மை விருதுகளை வெல்லும் வெற்றியாளர்களுக்குப் ரொக்கப் பணத்துடன் சொகுசு மின்சாரக் கார்களும் (EV) பரிசாக வழங்கப்படவுள்ளன.
ஊடகத்துறையின் உழைப்பையும் கலை மாண்பையும் அங்கீகரிக்கும் இந்த மாபெரும் கலைத் திருவிழா, திரை மறைவில் உழைக்கும் கலைஞர்களின் திறமைக்குக் மகுடம் சூட்டும் என்பதில் ஐயமில்லை.



