
இஸ்கண்டார் புத்ரி, மே-10- சாலையில் எதிர் திசையில் புகுந்த Perodua Axia கார், 2 கனரக லாரிகளுக்கு இடையில் சிக்கிக் கொண்ட வீடியோக்கள் வைரலாகியுள்ளன.
அவற்றைப் பார்க்கும் போது, அச்சம்பவம் ஜோகூர் கேலாங் பாத்தாவில் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது.
முதல் வீடியோவில், போக்குவரத்து நெரிசலால் நின்றிருக்கும் கார்களுக்கு நடுவில் வழக்கமாக மோட்டார் சைக்கிள்கள் போகும் பாதையில் அந்த Axia கார் புகுந்தது.
அடுத்த வீடியோவில், முன் பக்கத்தில் பதிவு எண் பட்டை இல்லாத அக்கார், 2 லாரிகளுக்கு நடுவே சிக்கிக் கொண்டு நகர முடியாமல் தவிப்பதைக் காண முடிந்தது.
லாரிகளுக்கு நடுவில் சிக்குவதற்கு முன் ஒரு Toyota Vios காரையும் இந்த Axia மோதியுள்ளது.
நேற்று காலை 9 மணிக்கு நிகழ்ந்த அச்சம்பவத்தை உறுதிப்படுத்திய இஸ்கண்டார் புத்ரி போலீஸ் தலைவர் எம். குமராசன், சம்பந்தப்பட்ட காரோட்டி அவராகவே முன் வந்து போலீஸ் நிலையத்தில் வாக்குமூலம் அளித்ததாகக் கூறினார்.
எண்ணெய் நிலையம் செல்லும் வழியில் தவறான பாதையில் புகுந்து விட்டதால் சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு எதிர் திசையில் போக வேண்டியச் சூழல் ஏற்பட்டதாக 26 வயது அவ்வாடவர் சொன்னார்.
இந்நிலையில் விசாரணைக்கு வந்துதவுமாறு, அந்த 2 லாரி ஓட்டுநர்களை குமராசன் கேட்டுக் கொண்டார்.