
ஜோர்ஜ்டவுன், செப்டம்பர்-25,
கல்வி உரிமைக்காக தொடர்ந்து போராடி வரும் மேலவை உறுப்பினர் செனட்டர் Dr லிங்கேஸ்வரன் ஆர். அருணாசலம், பல்கலைக்கழகப் படிப்பை தொடர விரும்பும் B40 குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார்.
இன்று, அவர் சுமார் 15 மாணவர்களின் பெயர்களை உயர் கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr சாம்ரி அப்துல் காடிரிடம் சமர்ப்பித்து, அரசாங்க பல்கலைக் கழக நுழைவு மற்றும் முன்னேற்பாடுகளுக்கான செலவுகளைச் சமாளிக்க உதவிகளை கோரினார்.
அப்பட்டியலில் இரு சகோதரிகள் நாகதேவி, நாகராணியும் அடங்குவர்.
இருவருக்கும் கணக்கியல் துறையில் இளங்கலைப் பட்டப்படிப்பை மேற்கொள்ள UPM எனப்படும் மலேசிய புத்ரா பல்கலைக் கழகத்தில் இடம் கிடைத்துள்ளது.
அவர்களின் தந்தை Parkinson அல்லது நடுக்குவாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே உள்ளார்; முழு நேரமும் அவரை கவனிக்க வேண்டியிருப்பதால், அவ்விரு சகோதரிகளின் தாயாரால் வேலைக்கு செல்ல முடியவில்லை.
இதனால், அவர்கள் தங்களின் கல்விக் கனவை நிறைவேற்ற வெளியாரின் உதவியை முழுமையாக நம்பியுள்ளனர்.
இந்நிலையில் லிங்கேஷ்வரன் மேற்கொண்ட முயற்சியின் பலனாக, இன்று UPM அதிகாரிகளும், உயர் கல்வி அமைச்சின் பிரதிநிதிகளும் அச்சகோதரிகளின் வீட்டுக்கு வருகைபுரிந்தனர்.
முன்னாள் முதல்வர் லிம் குவான் எங்கும் வந்திருந்தார்.
பின்னர் அமைச்சர் சாம்ரியுடன், காணொலி அழைப்பில் இரு சகோதரிகளுடன், குவான் எங், லிங்கேஷ்வரனும் கலந்துரையாடினர்.
அவர்களுக்கு பல்கலைக்கழக முன்னேற்பாட்டுச் செலவுக்கு RM1,500 உதவி நிதியுடன், மேலும் சில உதவிகளும் வழங்கப்பட்டன.
குடும்பச் சூழ்நிலையால் ஒரு மாணவரும் கல்வியில் பின்தங்கக் கூடாது என்பதே தமது நிலைப்பாடு எனக் குறிப்பிட்ட லிங்கேஷவரன், B40 மாணவர்களை ஆதரிக்க அமைச்சர் காட்டிய அக்கறைக்கு நன்றித் தெரிவித்தார்.