
புத்ராஜெயா, ஏப்ரல்-9-உலகளவில் நீடிக்கும் நிச்சயமற்றச் சூழல் மற்றும் எரிசக்தி நெருக்கடி காரணமாக, மலேசியர்கள் பொதுப் போக்குவரத்து மற்றும் மின்சார வாகனப் பயன்பாட்டுக்கு அதிகளவில் மாறக்கூடும்.
மத்தியக் கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் எரிபொருள் விலையில் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மக்களிடையே இந்த மாற்றம் வரலாம் என்றும், இது வரவேற்கக் கூடியதே என்றும் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
புத்ராஜெயாவில் இன்று நடைபெற்ற போக்குவரத்து அமைச்சின் மாதாந்திரக் கூட்டத்தில் பேசியபோது அவர் அவ்வாறு சொன்னார்.
இதையடுத்து, நாட்டின் பொதுப் போக்குவரத்து முறையை மிகவும் ஆற்றல்மிக்கதாகவும், நம்பகமானதாகவும், மக்களுக்குச் சிறந்த வசதியைத் தரும் ஒன்றாகவும் மாற்றுவதில் அமைச்சு கவனம் செலுத்தி வருவதாக அவர் சொன்னார்.
நீண்ட காலத்திற்கு புதைபடிவ எரிபொருட்களை (Fossil Fuels) சார்ந்திருப்பதை குறைப்பதற்கும், நிலைத்தன்மைமிக்க போக்குவரத்து மாற்றத்தை ஆதரிப்பதற்கும் இந்த முயற்சி முக்கியமானது என்றார் அவர்.
உலகச் சந்தையில் எண்ணெய் விலை உயர்ந்தாலும், அரசாங்கம் BUDI95 திட்டத்தின் கீழ் RON 95 மானிய பெட்ரோல் விலையை RM1.99 என்ற விலையில் தக்க வைத்திருப்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.



