
கோலாலாம்பூர், ஏப்ரல்-6-மேற்காசிய பதற்ற நிலையால் மலேசியாவிலும் எரிபொருள் நெருக்கடி நிலவிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், பெரிக்காத்தான் நேஷனல் நடத்திய மாபெரும் மோட்டார் சைக்கிள் பேரணியை, பி.கே.ஆர் துணைத் தலைவர் நூருல் இசா அன்வார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
திரங்கானுவில் சனிக்கிழமை நடைபெற்ற அப்பேரணியில், 100,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது.
பெரிக்காத்தான் ஆட்சி செய்யும் பெர்லிஸ், திரங்கானு, கெடா, கிளந்தான் ஆகிய மாநிலங்களின் மந்திரி பெசார்களும் அதில் கலந்து கொண்டனர்.
“மக்கள் எரிபொருள் விலை உயர்வால் சிரமப்படும் நிலையில், அவர்களின் நிலையறிந்து மானியங்களை நிலைநிறுத்தி அரசாங்கம் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
ஆனால் எதிர்ப்பு என்றப் பெயரில் பெரிக்காத்தானின் இந்த பேரணி எரிபொருளை வீணாக்குகிறது” என நூருல் இசா சாடினார்.
இது “முன்னுரிமை இல்லாத நடவடிக்கை” என்றும், உலக நாடுகள் எரிபொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் நிலையில், PN-ன் பேரணி தவறான செய்தியை அனுப்புகிறது என்றும், பிரதமரின் புதல்வியுமான அவர் வலியுறுத்தினார்.
மற்றவர்களை விட பெரிக்காத்தான் நேஷனலின் புதியத் தலைவரும் திரங்கானு மந்திரி பெசாருமான டத்தோ ஸ்ரீ சம்சுரி மொக்தாருக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வேண்டாமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
“எரிபொருள் நெருக்கடி காலத்தில், பொறுப்பான பயன்பாடு அவசியம். எதனையும் அரசியலாக்காமல் மக்களின் நலனுக்கே முன்னுரிமைத் தர வேண்டும்” என்றார் அவர்.



