Latestமலேசியா

ஒற்றுமையைப் பாதுகாக்க மத சகிப்புத்தன்மை அவசியம்: சாஹிட் வலியுறுத்து

கோலாலம்பூர், பிப்ரவரி-3-நாட்டின் பல்லின – மத சமூக ஒற்றுமையைப் பாதுகாக்க மத சகிப்புத்தன்மையை மேலும் வலுப்படுத்த வேண்டும் என துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி வலியுறுத்தியுள்ளார்.

வெவ்வேறு மதங்களைப் பின்பற்றும் மக்களிடையே பரஸ்பர மரியாதை மற்றும் புரிதல் மிகவும் அவசியம் என்றார் அவர்.

மசூதிகள், கோயில்கள், தேவாலயங்கள் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், அவற்றின் பாதுகாப்பு சமூகங்களுக்கு இடையிலான பதற்றங்களைத் தவிர்க்க உதவும் என்றும் சாஹிட் தெரிவித்தார்.

“நாம் பிற மதங்களை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். இதுவே மலேசியா ஒற்றுமை, சகிப்புத்தன்மை மற்றும் பன்முக இனங்களின் நாடாக மாறும் வழி” என்றார் அவர்.

தவிர, ஒழுக்க மதிப்புகளை வலுப்படுத்துவதும் சமூக ஒற்றுமையை வளர்க்க முக்கிய பங்கு வகிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

“உதாரணத்திற்கு பிரிக்ஃபீல்ட்ஸ் பகுதியை எடுத்துக் கொள்வோம். அங்கு 17-க்கும் மேற்பட்ட மத வழிபாட்டு தலங்கள் உள்ளன. அவற்றில் தேவாலயங்களும் கோவில்களும் அடங்கும்” எனக் கூறிய சாஹிட், வேறுபாடுகளைச் சமாளிப்பதில் முஸ்லீம்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

மதம் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான விவகாரங்கள் அவ்வப்போது சர்ச்சையாகி வரும் நிலையில், துணைப்பிரதமரின் இந்த கருத்துகள் முக்கிய நினைவூட்டலாகப் பார்க்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!