
கோலாலம்பூர், மார்ச்-21 – பல ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்ட ஒற்றுமையின் அடித்தளத்தை அழித்து விடுமென்பதால், எந்தவொரு வடிவத்திலும் பாகுபாடு என்பதே சமூகத்தில் இருக்கக்கூடாது.
தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டகாங் அதனை வலியுறுத்தியுள்ளார்.
இன உணர்வுகளைத் தொடும் பல சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்துள்ள நிலையில், இன்று அனுசரிக்கப்படும் இன பாகுபாடு ஒழிப்புக்கான அனைத்துலக தினத்தை ஒட்டி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் அவர் அவ்வாறு சொன்னார்.
சமூக நீதியின் கொள்கைகளை நிலைநிறுத்துவதற்கான உலகளாவிய முயற்சியில் இன்று மிகவும் முக்கியமான நாளாகும்.
எனவே, மலேசியர்கள், இனம் அல்லது மதத்தை அடிப்படையாகக் கொண்ட தவறான எண்ணங்கள், எதிர்மறையான கண்ணோட்டம் மற்றும் எந்தவொரு அநீதியையும் நிராகரிக்க வேண்டும்.
இது ஒரு நினைவூட்டல் மட்டுமல்ல; சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கக்கூடிய இனவெறி, இன பாகுபாடு, இன அவதூறுகள் மற்றும் தவறான எண்ணங்கள் போன்ற சம்பவங்களை ஒழிப்பதற்கான உலகளாவிய மற்றும் தேசிய மட்டங்களில் அசைக்க முடியாத அர்ப்பணிப்பின் அடையாளமாகும் என்றார் அவர்.
2022-லில் எடுக்கப்பட்ட தேசிய ஒற்றுமைக் குறியீட்டில், 0.629 என்ற அளவில் தேசிய ஒற்றுமை மிதமான மற்றும் சீரான அளவில் உள்ளது.
கோமாஸ் மையத்தின் மலேசிய இனவெறி அறிக்கை 2024 வெளியீட்டு விழாவில் அமைச்சர் அவ்வாறு சொன்னார்.
அவ்வறிக்கையில், 2015 முதல் 517 இனவெறி சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக கோமாஸ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அனைத்துலக சர்வதேச இனப் பாகுபாடு ஒழிப்பு தினத்தில், ஒன்றுபட்ட, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் இணக்கமான மலேசிய மடானியை உருவாக்க நாம் உறுதி ஏற்போம் என்றார் அவர்.