
கோலாலம்பூர், ஏப்ரல்-7, ஒழுங்குமுறை தேவைகளைப் பின்பற்றத் தவறியதற்காக 109 சொத்துடமை மேம்பாட்டாளர்களை, வீடமைப்பு – ஊராட்சித் துறை அமைச்சான KPKT கருப்புப் பட்டியலிட்டுள்ளது.
இது, வீடு வாங்குபவர்களின் உரிமைகள் மற்றும் முதலீடுகளைப் பாதுகாப்பதற்கான அமைச்சின் கடப்பாட்டை மறு உறுதிப்படுத்துகிறது.
கடந்தாண்டு மட்டும் 471 நோட்டீஸ்கள் வெளியிடப்பட்டு, மொத்தமாக 9.03 மில்லியன் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டதாக, அமைச்சர் ங்கா கோர் மிங் தெரிவித்தார்.
அதே சமயம், இவ்வாண்டின் முதலிரு மாதங்களில் மட்டும் 1.25 மில்லியன் ரிங்கிட் அபராதத்தை உட்படுத்திய 56 நோட்டீஸ்கள் வெளியிடப்பட்டன.
பெரும்பாலான விதிமீறல்கள், கட்டாய வளர்ச்சி நிலை புதுப்பிப்புகள், தணிக்கை அறிக்கைகள், இருப்புநிலைக் குறிப்புகள் மற்றும் லாப நஷ்ட கணக்கறிக்கைகளை அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்கத் தவறியது போன்றவற்றை உட்படுத்தியதாக கோர் மிங் கூறினார்.
பொறுப்புணர்வை உறுதி செய்யும் வகையில், கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட நிறுவனங்களின் இயக்குநர்கள் புதிய நிறுவனங்களின் கீழ் மீண்டும் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதும் தடைச் செய்யப்பட்டுள்ளது.
இந்த மேம்பாட்டாளர்கள், நிலுவையில் உள்ள அபராதங்களை முழுமையாகச் செலுத்தாத வரை, புதிய உரிமங்களுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
14-ஆம் ஆண்டாக நடைபெற்ற வாங்கும் சக்திக்குட்பட்ட வீடமைப்புத் திட்ட மாநாட்டில் பேசிய போது அமைச்சர் அவ்வாறு சொன்னார்.
கருப்புப் பட்டியலிடுவதானது, சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் விதிமுறைகளைப் பின்பற்றாமைக்கு அமைச்சு கரிசனம் காட்டாது என்பதற்காக தெளிவான எச்சரிக்கை என்றார் அவர்.
இந்தக் கருப்புப் பட்டியல் விரைவிலேயே அமைச்சின் இணையதளத்தில் வெளியிடப்படும்; இதன் மூலம், வீடு வாங்க நினைப்பவர்கள், முன் கூட்டியே மேம்பாட்டாளர்களின் நிலையைச் சரிபார்க்க முடியும்.
வீடு வாங்குவது தொடர்பான நிதி முடிவுகளை எடுப்பதற்கு முன், https://teduh.kpkt.gov.my என்ற அதிகாரப்பூர்வ இணையத் தளத்தில் பரிசோதித்துக் கொள்ளுமாறு ங்கா கோர் மிங் வலியுறுத்தினார்.