
மலாக்கா, ஜனவரி-14-மலாக்காவில் ஓரினச் சேர்க்கை நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் ‘gay-friendly’ என விளம்பரம் செய்து சர்ச்சையில் சிக்கிய ஒரு ஹோட்டலில், அதிகாரிகள் நேற்று காலை அதிரடிச் சோதனை நடத்தினர்.
ஹங் துவா ஜெயா நகராண்மைக் கழகத்துடன் இணைந்து, மலாக்கா இஸ்லாமிய சமயத் துறையான JAIM அதனை மேற்கொண்டது.
எனினும், அப்போது ஹோட்டல் காலியாக இருந்தது.
37 அறைகளும் பூட்டப்படாமல் திறந்தே கிடந்தன; பணியாளர்கள், வாடிக்கையாளர் என அங்கு யாரும் காணப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஹோட்டல் நிர்வாகத்தைத் தொடர்புகொண்ட போது, அவர்களும் சோதனையின் போது அங்கு வர மறுத்து விட்டனர்.
ஓர் அறையிலிருந்த குப்பைத் தொட்டியில் பயன்படுத்தப்பட்ட ஆணுறை மட்டும் கண்டெடுக்கப்பட்டது.
இந்நிலையில், ஹோட்டல் நிர்வாகம் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைக்கு ஒத்துழைக்கும் வரை, ஹோட்டல் நுழைவாயில் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதுபோன்ற ஓரினச் சேர்க்கை நடவடிக்கைகள் திருட்டுத்தனமாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது ஹோட்டல் சேவை விளம்பரத்திலேயே வெளிப்படையாக ‘gay-friendly’ என குறிப்பிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



