
குவாலா நெரூஸ், நவம்பர்-20 – திரங்கானுவில், காதலால் கட்டிய வீடு இன்று கடலின் கோபத்துக்கு ஆளாகி வருகிறது.
66 வயது Mohd Yazit Idris, தனது மனைவி மீது கொண்ட அளவுகடந்த பாசத்தின் அடையாளமாக கடலோரமாக பளிச்சென தெரியும் நீல நிற பங்களா ஒன்றை கட்டினார்.
ஆனால், அந்த கனவு வீடு இப்போது கடலின் சீற்றத்தில் சிதறிப் போகும் அபாயத்தில் உள்ளது.
வடகிழக்கு பருவமழையின் அலைகள் கரைத்தட்டி, அவரது 6 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள பங்களா வீட்டை அதிர வைத்துள்ளன.
சில நாட்களுக்கு முன், 3 மீட்டர் உயர அலைகள் கல்லால் கட்டிய தடுப்பை உடைத்து, வீட்டை நிலநடுக்கம் போல குலுக்கியதாக Yazit சோகத்துடன் கூறினார்.
தினமும் விடியற்காலை 2 மணிக்கு எழுந்து, கடல் இன்னும் எவ்வளவு நிலத்தை விழுங்கியிருக்கிறது என்று அவர் கலக்கத்தோடு பார்த்து வருகிறார்.
கடந்தாண்டு, வீட்டின் சமையலறை தூண்களே ஆடிப்போகும் அளவுக்கு கடற்கரை மணல் அரிப்பு ‘பயம் காட்டியது’.
இதையடுத்து அதிகாரத் தரப்பு கற்களை அடுக்கி பாதுகாப்பு போட்டது.
ஆனால் தடுப்புச் சுவர்கள் தொடர்ந்து மணல் அரிப்புக்கு ஆளாகி வருகின்றன.
ஆரம்பத்திலேயே தடுத்தால் பெரும் சேதாரத்தைத் தவிர்க்கலாம் என Yazit நம்புகிறார்.
தனது காதலின் அடையாளமான நீல பங்களா கடலில் விழுந்துவிடாமல் காப்பாற்றப்பட வேண்டும் என அவர் தினமும் பிரார்த்திக்கிறார்…



