
கோலாலம்பூர், பிப் 13 – செராசில் (Cheras) பட்டாசு விற்பனையாளர் ஒருவர் தனது கடையில் ஏற்பட்ட வெடிப்பிற்கு முழுப் பொறுப்பேற்பதாக உறுதியளித்துள்ளார். நான்கு நாட்களுக்கு முன்பு பட்டாசு விற்பனைக்கான தனது அனுமதி காலாவதியாவிட்டதாகவும் வெடிப்பு ஏற்பட்ட தினம்தான் கடையை நடத்துவதற்கான கடைசி நாள் என்று அந்த பட்டாசு விற்பனையாளர் ஒப்புக்கொண்டதாக ஊடக தகவல் ஒன்று தெரிவித்தது.
வானவெடிகள் மற்றும் பட்டாசுகளை விற்பனை செய்வதற்காக தாம் பெற்றிருந்த போலீஸ் அனுமதி பிப்ரவரி 7 ஆம் தேதி காலாவதியாகிவிட்டதை அந்த விற்னையாளர் தெரிவித்தார்.
அன்றைய இரவு கடையை மூடுவதாக இருந்தபோது திடீரென தீப்பிடித்ததாக அவர் கூறினார்.
இந்த தீ விபத்துக்கான சரியான காரணம் தெரியவில்லை என்றாலும், வாகன உரிமையாளர்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் உட்பட பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையாக இழப்பீடு வழங்குவதோடு இச்சம்பவத்திற்கு தாம் முழு பொறுப்பு ஏற்பதாகவும் உறுதியளித்துள்ளார்.
சேதமடைந்த வாகனங்களில் Toyota Velifire மற்றும் Perodua Bezza ஆகியவை முறையே அவரது மனைவி மற்றும் சகோதரிக்கு சொந்தமானவை.
கடந்த ஆண்டு ஏப்ரலில் தான் Velifire வாங்கியதை அந்த விற்பனையாளர் உறுதிப்படுத்தினார். பட்டாசு கடைக்கு அருகில் இருந்ததால் 5 வாகனங்கள் தீயில் சேதம் அடைந்தன.
சம்பவத்தின் போது, Velfire வாகனத்தை பாதுகாப்பான இடத்திற்கு தனது மனைவி நகர்த்த முயன்தாகவும் , ஆனால் தீ வேகமாக பரவியதால் அதை கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் அந்த வர்த்தகர் தெரிவித்தார்.