
கோலாலம்பூர், ஜூலை 29- மலேசியாவில் இடைநிலைப் பள்ளிக் கல்வியை கட்டாயமாக்கும் நோக்கில் தேசிய கல்விச் சட்ட திருத்த மசோதாவை நேற்று நாடாளுமன்றத்தில் துணைக் கல்வி அமைச்சர் வோங் கா வோ சமர்ப்பித்துள்ளார்.
இந்த மசோதா, 1996 கல்விச் சட்டத்தில் இருக்கும் “கட்டாயக் கல்வி” வரையறை கொள்கையில் இடைநிலைப் பள்ளிக் கல்வியைச் சேர்க்கும் வகையில் திருத்த முயல்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சட்ட திருத்தம் அமலுக்கு கொண்டு வரப்பட்டால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஆரம்ப மற்றும் இடைநிலைக்கல்வியை கட்டாயம் வழங்க வேண்டும் என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
சட்டத்திற்கு எதிராக தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கத் தவறினால், பெற்றோர்களுக்கு 5,000 ரிங்கிட் வரை அபராதம் மற்றும் ஆறு மாத சிறைத்தண்டனையும் நிச்சயம் விதிக்கப்படும்.
அதே நேரத்தில் ஆரம்ப பள்ளி மாணவர்களின் பதிவு தொடர்பான விதிகளையும் இந்த சட்டம் திருத்தும் என்றும், எந்தவொரு கல்வியாண்டிலும் ஜனவரி 1 ஆம் தேதிக்குள் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ஆறு வயது பூர்த்தியாவதற்குள் பள்ளியில் சேர்க்க வேண்டுமென்றும் வோங் நினைவூட்டியுள்ளார்.
புதிய நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதால் கூடுதல் அரசாங்கச் செலவு ஏற்படும் என்றும், சரியான தொகை இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்றும் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.