
சென்னை, செப்டம்பர்-28,
தமிழகத்தின் கரூரில் தமிழ் வெற்றிக் கழகத்தின் பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு, தலா 20 லட்சம் ரூபாய் வழங்குவதாக அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் கூறியுள்ளார்.
அதே சமயம் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வருவோருக்கு தலா 2 லட்சம் ரூபாயும் வழங்க எண்ணியுள்ளதாக, தனது X தளப் பதிவில் அவர் சொன்னார்.
உயிர் இழப்புக்கு முன்னால் இதுவொன்றும் பெரியத் தொகை இல்லை என்றாலும், இந்த இக்கட்டான நேரத்தில் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டியது தன் கடமை என்றார் அவர்.
சிகிச்சை முடிந்து விரைவிலேயே அனைவரும் வீடு திரும்ப பிராத்திப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வேளையில், உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமரின் நிவாரண நிதியாக தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படுமென பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழக்கவும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடையவும் காரணமான நேற்றைய அச்சம்பவம் குறித்து விசாரிக்க தமிழக அரசால் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணையம் இன்றே விசாரணையைத் தொடங்குகிறது.
ஓய்வுப் பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான குழு தற்போது கரூர் புறப்பட்டுள்ளது.
விசாரணை அறிக்கையைப் பொறுத்தே அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.