
சென்னை, அக்டோபர்-29,
கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரின் கால்களில் விழுந்து, அதன் தலைவரும் நடிகருமான விஜய் மன்னிப்புக் கேட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
கரூக்குப் போக முடியாதச் சூழலில், சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் தனியார் ஹோட்டலில் நேற்று முந்தினம் விஜய் சந்தித்து ஆறுதல் கூறினார்.
சம்பவம் நிகழ்ந்து 1 மாதத்திற்கு மேலான பிறகும் இறப்பு வீடுகளுக்குச் சென்று துக்கம் விசாரிக்காமல், ஹோட்டலுக்கு அழைத்து அனுதாபம் தெரிவிப்பதா என விஜய் மீது சமூக ஊடகங்களில் அவரின் கட்சிக்காரர்கள் உட்பட பல தரப்பினரிடமிருந்து கடும் விமர்சனங்கள் எழுந்தன.
என்ற போதிலும், திட்டமிட்டபடி பேருந்துகளில் கொண்டு வரப்பட்ட குடும்ப உறுப்பினர்களை விஜய் தனியாகச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இது குறித்து வீடியோக்களோ செய்திகளோ எதுவும் வெளிவராத நிலையில், குடும்ப உறுப்பினர்களின் காலில் விழுந்து விஜய் மன்னிப்புக் கேட்டதாக, பேட்டியளித்துள்ளனர்.
“குடும்பத்தினருக்கு என்னென்ன உதவிகள் தேவை என்றும் கேட்டுக் கொண்டார். உடல் மெலிந்து அவர் மிகவும் மன அழுத்ததில் இருந்ததை உணர்ந்தோம்” என 2 பேத்திகளை பறிகொடுத்த பாட்டி சோகத்தில் கூறினார்.
விஜய் காலில் விழுந்து அழுது மன்னிப்புக் கேட்டதை தங்களாலேயே தாங்க முடியவில்லை என இன்னொரு மாது தெரிவித்தார்.
அன்றைய தினம் வர முடியாத மேலும் 2 குடும்பங்களை விமானத்தில் வரவழைத்து விஜய் பேசியிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, த.வெ.கட்சியை மீண்டும் மக்கள் இயக்கமாகவே மாற்றிவிடலாமா என, ஆறுதல் பெற வந்தவர்களிடம் விஜய் கேட்டதாகவும், தமிழகத்தின் தினமலர் இணைய ஊடகம் பரபரப்பு செய்தி வெளியிட்டுள்ளது.
கரூர் சம்பவத்தின் வலியோடு நீண்ட காலத்துக்கு கட்சியை வலிமையாக நடத்த முடியுமா, அதற்கான சூழல் அமையுமா எனத் தெரியவில்லை என அவர் கூறியதாகவும், ஆனால் கட்சியைத் தொடர்ந்து நடத்துமாறு நிர்வாகிகள் வற்புறுத்தியதாகவும் தெரிகிறது.
நிலைமை சுமூகமானதும் கரூர் சென்று மக்களைச் சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளாராம்.



