
காஜாங், ஏப்ரல்-22,சிலாங்கூர், காஜாங், தாமான் கன்ட்றி ஹைய்ட்ஸில் 46 ஆண்டுகளாக ஒரு வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த 300 கிலோ எடையிலான முதலை, பாதுகாப்பாக வேறிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசியப் பூங்காக்கள் துறையான PERHILITAN-னின் சிலாங்கூர் கிளை, தேசிய வனவிலங்கு மீட்பு மையத்தின் உதவியுடன் அந்நடவடிக்கையை ஏப்ரல் 13-ஆம் தேதி மேற்கொண்டது.
முதலையை வளர்க்க அதன் உரிமையாளருக்கு இத்தனை காலமும் PERHILITAN சிறப்பு பெர்மிட்டை வழங்கியிருந்தது.
எனினும், விலங்கு நலனில் அக்கறை கொண்டதாலும் அதன் நீண்டகால பாதுகாப்பு முயற்சிகளை ஆதரிக்கும் வகையிலும், உரிமையாளர் தானே முன் வந்து அதனை ஒப்படைத்துள்ளார்.
தெம்பாகா வகை அந்த பெண் முதலை 4 மீட்டர் நீளம் கொண்டதாகும்.
அதனைப் பிடித்து, கயிற்றால் கட்டி, வாகனத்தில் ஏற்றுவதற்கு சுமார் 1 மணி நேரம் பிடித்தது.
முதலை அதிக உடல் எடையுடன் இருந்ததும், பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்ய வேண்டியிருந்ததும் சவாலாக இருந்ததாக PERHILITAN அதிகாரி கூறினார்.
எவ்வித காயங்களும் இன்றி Paya Indah Wetlands மையத்திற்கு பரிசோதனைகாக அது கொண்டுச் செல்லப்பட்டது.