
ஜோகூர் பாரு, ஜூலை-29- நெகிரி செம்பிலான், ரொம்பினில் 6 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான அவனது தந்தை, விசாரணைகளுக்காக 7 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.
இஸ்கண்டார் புத்ரி போலீஸ் தலைவர் எம். Kumarasan அதனை உறுதிபடுத்தியுள்ளார்.
ஜோகூர் பாரு புக்கிட் இண்டாவில் ஜூலை 24-ஆம் தேதி உணவு வாங்குவதற்காக வெளியில் செல்லும் முன் காரில் தாம் விட்டுச் சென்ற மகன், வந்துபார்த்த போது காணாமல் போனதாக 36 வயது அவ்வாடவன் முன்னதாக போலீஸில் புகாரளித்திருந்தான்.
எனினும், அவ்வாடவனை போலீஸ் துருவி துருவி விசாரித்ததில் ரொம்பினில் அச்சிறுவனது சடலம் கண்டெடுக்கப்பட்டதாக குமரேசன் சொன்னார்.
போலி புகார் செய்ததன் பேரில் அவன் தற்போது விசாரிக்கப்படுகிறான்; விசாரணை நெகிரி செம்பிலான், ஜெம்போல் குற்றப்புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அவ்வாடவன் போதைப்பொருள் உட்கொண்டிருக்கவில்லை என்பதும், அவனுக்கு பழையக் குற்றப்பதிவுகள் இல்லையென்பதும் உறுதிப்படுத்தப்பட்டது.
கொல்லப்பட்டதாக நம்பப்படும் அச்சிறுவனது சடலம் நேற்று முந்தினம் சம்பவ இடத்தில் புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தாமான் புக்கிட் இண்டாவில் kopitiam காப்பிக் கடையில் காணாமல் போன 6 வயது சிறுவனைக் கண்டுபிடிக்க உதவ, ஜூலை 26-ஆம் தேதி போலீஸார் பொது மக்களைக் கேட்டுக் கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.