
கோலாலம்பூர், மே 22 – செந்தூல் ராயா பகுதியில் கடந்த புதன்கிழமை நண்பகலில் சாலையின் நடுவே நிகழ்ந்த கைகலப்பு சம்பவத்திற்கு 20,000 ரிங்கிட் கடன் பிரச்சினையும் காதல் தொடர்பான முரண்பாடும் காரணமாக இருந்ததாக போலீஸ் தெரிவித்துள்ளது.
செந்தூல் மாவட்ட துணை காவல்துறைத் தலைவர் சுப்பரின்தென்டென்ட் ஜாஸ்னி சோல்பா (Superintendent. Jasni Zolpa) கூறுகையில், இதுவரை இரு ஆண்கள் மற்றும் இரு பெண்கள் உட்பட நான்கு உள்ளூர்வாசிகள் கைது செய்யப்பட்டு, இரண்டு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சம்பவத்தில் தொடர்புடையதாக அடையாளம் காணப்பட்டுள்ள மூவர் இன்னும் தலைமறைவாக உள்ளனர்; அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என அவர் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட 1 நிமிடம் 29 விநாடிகள் கொண்ட காணொளியில், பெண்கள் உட்பட ஒரு குழுவினர் சாலையின் நடுவே சண்டையிடும் காட்சிகள் பதிவாகியிருந்தன.
போலீஸ் விசாரணையில், சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.



