Latestமலேசியா

கோலாகலமாக நடைபெற்ற உலு கிந்தா ஸ்ரீ கணேசர் ஆலய மகா கும்பாபிஷேகம்

தஞ்சோங் ரம்புத்தான், ஜூலை-6-பேராக், உலு கிந்தா தஞ்சோங் ரம்புத்தானில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற குருவிமலை அருள்மிகு ஸ்ரீ கணேசர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.

75 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம், சுமார் 3 லட்சம் ரிங்கிட் செலவில் முழுமையாகப் புதுப்பிக்கப்பட்டு, இன்று மூன்றாவது முறையாக மகா கும்பாபிஷேகம் கண்டது.

இந்த விழாவில் பேரா ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன், சட்டமன்ற உறுப்பினர் முகமட் அரப்பாட் மற்றும் தம்பூன் நாடாளுமன்ற சிறப்பு அதிகாரி டத்தோ ஆர். சுரேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விழாவுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய டத்தோ சிவநேசன், அரசு நிலங்களில் உள்ள ஆலயங்களை அகற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டால், அவற்றுக்கு மாற்று இடம் வழங்கப்படும் என உறுதியளித்தார்.

அதேநேரம், ஆலயங்களை அரசாங்கப் பதிவேட்டில் முறையாகப் பதிவுச் செய்வது சட்டச் சிக்கல்களைத் தவிர்க்க மிகவும் அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

இவ்வேளையில், ஆலயப் பணிகளுக்காக டத்தோ சிவநேசன் அரசு மானியமாக 40,000 ரிங்கிட்டும், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் 30,000 ரிங்கிட்டும், முகமட் அரப்பாட் 10,000 ரிங்கிட்டும், மற்றும் பொது நலத் தொண்டர் டத்தோ ஸ்ரீ க. இருதயநாதன் 50,000 ரிங்கிட்டும் வழங்கியுள்ளதாக ஆலயத் தலைவர் க. தர்மலிங்கம் தெரிவித்தார்.

மற்றொரு நிலவரத்தில், உலு கிந்தாவில் நிலப் பிரச்னையைச் சந்தித்து வரும் ஏழு கன்னியர் காளியம்மன் ஆலய விவகாரத்திற்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும் டத்தோ சிவநேசன் குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!