காப்புரிமை சர்ச்சையால் அஜீத் குமாரின் குட் பேட் அக்லி திரைப்படம் நெட்ஃபிளிக்ஸில் இருந்து நீக்கம்

சென்னை, செப்டம்பர்-17,
நெட்பிளிக்ஸ் மற்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் இனி குட் பேட் அக்லி திரைப்படத்தை அந்த ஸ்ட்ரீமிங் தளத்தில் காண முடியாது.
காப்புரிமைப் பிரச்னையால் அது அங்கிருந்து நீக்கப்பட்டுள்ளது.
அதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இப்படத்தில் அஜீத் குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் இடம்பெற்ற அப்படத்தை வெளியிட தயாரிப்பாளர்களுக்கு நீதிமன்றம் தடை விதித்ததை அடுத்து, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு மகத்தான வெற்றிப் படமாக அமைந்த குட் பேட் அக்லியில் இளையராஜாவின் புகழ்பெற்ற ‘ஒத்த ரூபா தாரேன்’, ‘என் ஜோடி மஞ்ச குருவி’, ‘இளமை இதோ இதோ’ போன்ற பாடல்கள் இடம்பெற்றிருந்தன.
அனுமதியின்றி பாடல்களைப் பயன்படுத்தியதாகக் கூறி தயாரிப்பாளர்கள் 5 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்த வேண்டும் என்றும் எழுத்துப் பூர்வ மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் இளையராஜா முன்னதாக வழக்கு தொடர்ந்திருந்தார்.
பின்னர், பட நிறுவனத்திற்கு எதிராக காப்புரிமை மீறல் வழக்கையும் தாக்கல் செய்தார்.
ஆனால், உரியவரிடம் அனுமதிப் பெற்றுதான் பாடல்களைப் பயன்படுத்தியதாக நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் தெரிவித்தாலும், அது யாரென்று குறிப்பிடவில்லை.
குட் பேட் அக்லி ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
ஒரு மாதம் கழித்து மே 8 அன்று நெட்ஃபிளிக்ஸில் வெளியாகி இருந்த இப்படத்தில், த்ரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரபு, சுனில் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.