கோலாலம்பூர், செப்டம்பர்-11, டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் முன்னாள் உதவி ஆராய்சியாளர் முஹமட் யூசோஃப் ராவுத்தர் (Muhammed Yusoff Rawther), சுடும் ஆயுதம் மற்றும் போதைப் பொருள் வைத்திருந்ததன் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
செப்டம்பர் 6-ம் தேதி காலை கோலாலம்பூர் போலீசால் அவர் கைதுச் செய்யப்பட்டார்.
யூசோஃப் பயணித்த வாகனத்தில் 2 கைத்துப்பாக்கிகளும், 305 கிராம் எடையிலான கஞ்சா வகைப் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டதாக, அவரின் வழக்கறிஞர் சார்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டது.
1952-ஆம் ஆண்டு அபாயகரப் போதைப்பொருள் சட்டத்தின் கீழ் அவர் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட சுடும் ஆயுதங்களும் போதைப்பொருளும் தனக்குச் சொந்தமானதை அல்ல என்று விசாரணை அதிகாரிகளிடம் யூசோஃப் தெளிவாக எடுத்துக் கூறிவிட்டார்.
சிறுநீர் பரிசோதனையில் அவர் போதைப்பொருள் உட்கொண்டிருக்கவில்லை என்பதும் உறுதிச் செய்யப்பட்டுள்ளதாக அவ்வறிக்கை கூறியது.
இந்த யூசோஃப் ராவுத்தர் தான் டத்தோ ஸ்ரீ அன்வாருக்கு எதிராக பாலியல் தொல்லை வழக்குத் தொடுத்தவர் ஆவார்.
அவ்வழக்கு அடுத்தாண்டு ஜூன் மாதம், 7 நாட்களுக்கு விசாரணைக்கு வருமென கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.