
ஆஸ்திரேலியா, நவம்பர் 17 – திருவிழாக்கள், கடற்கரையோரங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் காணப்படும் காலி டின்கள் மற்றும் பாட்டில்களை விற்று ஒருவர் வீடு வாங்க இயலுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே.
ஆனால் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 36 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஒருவர், கடந்த ஏழு ஆண்டுகளாக சேகரித்து வைத்த சுமார் அரை மில்லியன் டின் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சிக்கு அனுப்பி சம்பாதித்த பணத்தில் தனது முதல் வீட்டை வாங்கிய சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
குழந்தை டெப்பாசிட் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு காலி டின் மற்றும் பாட்டிலுக்கும் 10 சென் வழங்கப்படுகின்றது. இதன் மூலம் அவர் 46,000 ஆஸ்திரேலிய டாலர் வரை சேமித்து, அதை வீடு வாங்க பயன்படுத்தியுள்ளார்.
சாலையோரம் மற்றும் கடற்கரையிலும் கைவிடப்பட்ட பானக் கொள்கலன்களை சேகரித்து வந்த அவரது முயற்சி சமூகத்தில் குப்பை குறைப்பு மற்றும் கார்பன் வெளியீட்டை தடுக்க உதவியதாக பாராட்டப்பட்டு வருகின்றது.
சமூக ஊடகப் பயனர்கள் அவரை “குப்பையைச் சொத்தாக மாற்றிய மனிதர்” என புகழ்ந்து வருகின்ற அதே வேளை அவரது சிந்தனை பலருக்கும் உந்துதலாக அமைந்து வருகின்றது என்று கூறியுள்ளனர்.



