
கோலாலம்பூர், மே-10- காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையில் நிலவி வரும் நீண்ட கால மோதல், உண்மையில் அதிரடி திருப்பத்தை கொண்டுள்ளது.
இது வெறும் நில உரிமைப் போராட்டமல்ல, மாறாக மறைமுக உயர் தொழில்நுட்ப ஆயுதப் போராட்டக் களமாக தற்போது மாறியுள்ளது.
ஜம்மு – காஷ்மீரில் சுற்றுப்பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தனக்குச் சொந்தமான சீனாவில் தயாரிக்கப்பட்ட J-10C போர் விமானங்கள் இந்திய ரஃபேல் உள்ளிட்ட விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறுகிறது.
இந்தியாவோ இதனை உறுதிப்படுத்தவில்லை; என்றாலும், பல உலக வல்லரசுகளின் கவனம் தெற்காசிய வானத்தையே சுற்றி வருகிறது.
காரணம், இது இனி இந்தியா-பாகிஸ்தான் போட்டி மட்டும் அல்ல, மாறாக சீன ஆயுத நுட்பம் மற்றும் மேலை நாட்டு ஆயுதங்கள் இடையேயான நேரடி மோதல்.
பாகிஸ்தான் சீனாவின் ஆதரவுடன் செயல்பட, இந்தியாவோ அமெரிக்கா, பிரான்ஸ், இஸ்ரேல் ஆகியவற்றுடன் உறவை வலுப்படுத்தி வருகிறது.
பாகிஸ்தானின் ஆயுதங்களில் 80 விழுக்காட்டுக்கும் மேல் சீனாவால் வழங்கப்படுவதால், இந்த மோதல் சீன ஆயுதங்களின் நேரடி சோதனைமேடையாக மாறியுள்ளது. சீன ஆயுதங்கள் இந்த மோதலில் எதிர்ப்பார்க்கப்பட்ட வல்லமையக் காட்டவில்லை என்றால் அது சீனாவுக்கு பெரும் அவமானத்தையும் வணிக இழப்பையும் கொண்டு வந்துவிடும்.
இதற்கிடையில் ரஷ்யாவைப் பெரிதும் நம்பியிருந்த இந்தியா இப்போது நவீன போர் திறன்களின் முன்னணிக் களமாக உள்ளது.
ஆக, காஷ்மீர் இனி வெறும் வட்டார பிரச்னையல்ல — இது உலக ஆயுத சக்தியின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் போர்க்களமாகும் என புவிசார் அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.
சில முக்கிய பங்காளிகள் தன் பின்னால் கேடயமாக நிற்பதாலும் தன் உள்ளூர் தொழில்நுட்ப வல்லமையால் உருவாக்கப்பட்ட தற்காப்பு மற்றும் போர் ஆய்தங்களாலும், இந்தியாவும் வரலாறு காணாத துணிச்சலோடு போர்க்களத்தில் யாரையும் எதிர்த்து நிற்கும் ஆற்றலோடு திகழ்கிறது என அவர்கள் கருதுகின்றனர்.