
கோலாலம்பூர், ஜூலை 22- கடந்த மாதம் கிளந்தான் காவல்துறையினரால் சோதனை செய்யப்பட்ட “ஓரினச்சேர்க்கை விருந்து” உண்மையில் ஒரு எச்.ஐ.வி விழிப்புணர்வு நிகழ்ச்சி என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அஹ்மத், நேற்றிரவு தனது சமூக வலைத்தள பக்கத்தில், இச்சம்பவம் தொடர்பாக கிளந்தான் சுகாதாரத் துறையின் அறிக்கையைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
மலேசிய எய்ட்ஸ் அறக்கட்டளையின் (MAF) வழிகாட்டுதலின் கீழ் செயல்படும் அரசு சாரா அமைப்பான சஹாபத் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.
நரம்பு வழியாக போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் மற்றும் ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்கள் (MSM) உட்பட அதிக ஆபத்துள்ள மக்களை இலக்காகக் கொண்ட சுகாதார கல்வியினை சஹாபத் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் வழங்கி வருகின்றது.
இருப்பினும், பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இது ஒரு “ஓரினச்சேர்க்கை விருந்து” என்ற கூற்றினை முற்றிலும் நிராகரித்து எச்.ஐ.வி தொடர்பான தகவல்களை வழங்குதல், ஆணுறைகளை விநியோகித்தல் மற்றும் பாதுகாப்பான பாலியல் நடைமுறைகளை ஊக்குவிக்கும் வகையில் மட்டுமே இந்நிகழ்வு நடைபெற்றது என்று விளக்கமளித்துள்ளன.