
கிள்ளான், செப்டம்பர்-20,
சிலாங்கூர் கிள்ளானில் நேற்று முன்தினம் இரவு நடந்த அதிரடிச் சம்பவத்தில், 3 ஆடவர்கள் போலீஸாரால் கைதுச் செய்யப்பட்டனர்.
இரவு 11.15 மணியளவில் ஜாலான் கெபுன் வட்டச் சாலையில் சந்தேகத்துக்கிடமான முறையில் ஓடிக்கொண்டிருந்த கருப்பு நிற புரோட்டான் வாஜா கார் போலீஸ் சோதனையில் சிக்கியது.
நிறுத்தச் சைகை காட்டியபோது, கார் தப்பிச் செல்ல முயன்றதால், 5 போலீஸ் வாகனங்கள் அக்காரைத் துரத்திச் சென்றன.
இறுதியில் கார் பண்டார் செந்தோசாவில் பிடிபட்டதாக, தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் ரம்லி காசா தெரிவித்தார்.
காரிலிருந்து ஒரு பாராங் கத்தி மற்றும் ஒரு ஜோடி கையுறைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
31 முதல் 42 வயதுக்குட்பட்ட மூவருக்கும் ஏற்கனவே குற்றப்பதிவுகள் இருப்பது கண்டறியப்பட்டது; காரை ஓட்டிய நபர் மட்டுமே 23 குற்ற வழக்குகளிலும் 11 போதைப்பொருள் தொடர்பான வழக்குகளிலும் தொடர்புடையவர் எனவும் போலீஸ் கூறியது.
மூவரும் விசாரணைக்காக 4 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டனர்.