கிள்ளான், நவம்பர்-11 – சிலாங்கூர், கிள்ளானில் ஐஸ்கிரீம் விற்கும் கடையிலிருந்து கல்லாப்பெட்டியோடு, வாடிக்கையாளரின் கைப்பேசிகளுடன் இரு கொள்ளையர்கள் கம்பி நீட்டிய சம்பவம் வைரலாகியுள்ளது.
அக்டோபர் 23-ஆம் தேதி இரவு கிள்ளான் துறைமுகம், காவாசான் 12, ஜாலான் பெசார் பண்டமாரானில் அக்கொள்ளை நிகழ்ந்துள்ளது.
அந்த ஆயுதமேந்தியக் கொள்ளை CCTV கேமராவில் பதிவாகி தற்போது வைரலாகியுள்ளது.
பாதிக்கப்பட்டவரான 16 வயது கடைப் பணியாளர் அது குறித்து போலீசில் புகார் செய்ததாக, தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் Cha Hoong Fong உறுதிப்படுத்தினார்.
இரு கொள்ளையர்களும் பாராங் கத்தி ஏந்தியிருந்தனர்.
முதலாமவன் அங்கிருந்த வாடிக்கையாளரைத் தள்ளி விட்டு, அவரிடமிருந்து 2 கைப்பேசிகளை அபகறித்துக் கொண்டான்.
மற்றொருவனோ, வயர் கம்பியை பாராங் கத்தியால் வெட்டி விட்டு, கல்லாப்பெட்டியைத் தூக்கிக் கொண்டான்
இருவரும் நீல நிற Perodua Iriz காரில் தப்பியோடினர்.
விசாரணையில் 46 வயது சந்தேக நபர் கைதாகி நீதிமன்றத்திலும் குற்றம் சாட்டப்பட்டு விட்டான்.
கிள்ளான் செஷன்ஸ் நீதிமன்றம் அவனுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை யும் ஒரு பிரம்படியும் விதித்து தீர்ப்பளித்தது.
இன்னமும் தலைமறைவாக இருக்கும் மற்றொரு கொள்ளையன் தீவிரமாகத் தேடப்பட்டு வருகிறான்.