
கோலாலம்பூர், டிசம்பர்-10, ஒரு ஜனநாயக நாட்டில் கருத்து சுதந்திரம் இருக்க வேண்டுமென்பதில் மாற்றுக் கருத்தில்லை.
ஆனால், அதற்கும் ஓர் எல்லையுண்டு; சமூக ஊடகங்களில் மற்றவர்களை தரக்குறைவாகப் பேசுவதற்கும் அவதூறு பரப்புவதற்கும் அச்சுதந்திரம் பயன்படுத்தப்படக் கூடாது.
அவற்றை அரசாங்கம் அனுமதிக்கவும் கூடாது என, பினாங்கு ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் வலியுறுத்தினார்.
அண்மையில், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமை மாபெரும் உலகத் தலைவர்களான மகாத்மா காந்தி மற்றும் நெல்சன் மண்டேலாவுடன் ஒப்பிட்டுப் பேசியதற்தாக, சுமூக ஊடகங்களில் தாம் மிகவும் மோசமாக விமர்சிக்கப்பட்டதை ராயர் சுட்டிக் காட்டினார்.
நாட்டு மக்களுக்கு சேவையாற்றும் பிரதமரை நாடாளுமன்றத்தில் பாராட்டிப் பேசினேன்; அதற்காக அவருக்கு நான் வெண்சாமரம் வீசுவதாகக் கூறி சமூக ஊடகங்களில் நாலாப்பக்கமும் என்னை மிகவும் கீழ்த்தரமாக வசைபாடுகின்றனர்.
கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இது போன்ற எல்லை மீறல்களை அனுமதிக்கக் கூடாது.
எல்லை மீறிய கருத்துகளால் ஏஷா என்ற பெண்ணை நாம் பறிகொடுத்திருக்கிறோம்.
இது போன்ற சம்பவங்களைத் தடுக்க வேண்டுமென்பதால், தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத் திருத்த மசோதாவைத் தாம் ஆதரிப்பதாக, மக்களவையில் அதன் மீதான நேற்றைய விவாதத்தில் பங்கேற்று பேசிய போது ராயர் சொன்னார்.
சமூக ஊடகங்கள், அனைவருக்கும் பாதுகாப்பானச் சூழலை ஏற்படுத்தித் தருவதை உறுதிச் செய்யும் பொருட்டு, அச்சட்டத் திருத்த மசோதாவை தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் முன்னதாக தாக்கல் செய்தார்.
ஆளுங்கட்சி எதிர்கட்சி உறுப்பினர்களின் விவாதங்களுக்குப் பிறகு, நேற்று மாலை அம்மசோதா நிறைவேறியது.