Latestமலேசியா

கும்பலுடன் கருத்து வேறுபாடு புந்தோங்கில் ஆடவர் வெட்டிக் கொல்லப்பட்டார்

ஈப்போ, ஏப் 8- புந்தோங் பகுதியில் நேற்றிரவு ஆடவர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சண்டையானது குழுக்களுக்கு இடையிலான தகராறின் விளைவாக ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.

கார் வாடகைக் கடையில் நடந்த இந்தச் சம்பவம் இனப் பாகுபாட்டுடன் தொடர்புடையது அல்ல என்பதைத் தனது துறையும் உறுதிப்படுத்தியதாக பேராக் போலீஸ் தலைவர் டத்தோ நோர் ஹிசாம் நோர்டின் ( Noor Hisam Nordin ) கூறினார்.

இந்த விவகாரத்தில் சந்தேக நபராகக் கருதப்படும் 23 வயது இளைஞர் கைது செய்யப்பட்டதால் , மேலும் பலர் கைது செய்யப்படுவதற்கும் இது வழிவகுக்கும் என நம்பப்படுகிறது.

இது முழுக்க முழுக்க கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலாகும் என Noor Hisam Nordin தெரிவித்தார்.சம்பவத்திற்கான காரணத்தை கண்டறிய போலீஸ் விசாரணை அனைத்துக் கோணங்களிலும் ஆராயும்.

திங்கட்கிழமை இரவு 11.10 மணிக்கு நடந்த இந்தச் சம்பவத்தில், பாதிக்கப்பட்ட 25 வயதுடைய நபர் தாம் பணிபுரிந்து வந்த கார் வாடகை நிறுவனத்திற்கு அருகில் சாலையின் நடுவில், கூர்மையான ஆயுதத்தால் வெட்டப்பட்டதால் ஏற்பட்டதாக நம்பப்படும் கடுமையான காயங்களுடன் கிடந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

சம்பவம் நடந்த நேரத்தில், பாதிக்கப்பட்டவர் தனது நண்பர்களுடன் அந்த நிறுவனத்தில் இருந்தபோது, ​​ ஆயுதம் ஏந்திய சந்தேக நபர்கள் குழுவால் தாக்கப்பட்டார்.

இந்த சம்பவத்தில் இறந்தவரின் இரண்டு நண்பர்கள் தற்போது ராஜா பெர்மைசூரி பைனூன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதோடு அவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தண்டனைச் சட்டத்தின் 302ஆவது பிரிவு மற்றும் அதே சட்டத்தின் 326 மற்றும் 148 பிரிவுகளின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!