
கோலாலாம்பூர், பிப்ரவரி-6-தமிழகத்தின் இளம் இசைமேதைகளான லிட்டியன் நாதஸ்வரம், அமிர்தவர்ஷினி ஆகியோர் தயாரித்துள்ள ‘குறளிசைக் காவியத்தின்’ 7-ஆவது தொகுப்பு நாளை மலேசியாவில் பிரமாண்ட வெளியீடு காண்கிறது.
பெட்டாலிங் ஜெயா, BAC கோபுரத்தின் The Omnia ஆடிட்டோரியத்தில் நாளை மாலை 6 மணிக்குத் தொடங்கும் இந்நிகழ்ச்சியை T-Lax Avenue ஏற்பாடு செய்கிறது.
TASLY நிறுவனம் ஆதரவில் நடைபெறும் இந்த இசை வெளியீட்டுக்கு வணக்கம் மலேசியா அதிகாரப்பூர்வ டிஜிட்டல் ஊடகமாகும்.
லிடியன் நாதஸ்வரம், அமிர்தவர்ஷினி இருவரும் 1,330 குறட்பாக்களையும் இசையுடன் பாடி இசையுடன் பொருள் கூறி இந்தக் குறளிசைக் காவியத்தை வெளியிட்டுள்ளனர்.
இதன் முதல் தொகுப்பின் வெளியீடு கடந்தாண்டு செம்பம்பரில் தமிழ்நாடு வள்ளுவர் கோட்டத்தில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், ஏழாவது தொகுப்பை மலேசியாவில் நடத்துவது பெருமையளிப்பதாக TASLY நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ ரவி பக்கிரிசாமி கூறினார்.
திருக்குறளை குழந்தைகள் முதல் அனைத்து வயதினரும் உள்வாங்கிடும் வகையில் இந்த குறளிசை காவியம் படைக்கப்பட்டுள்ளது.
மலேசியாவைச் சேர்ந்த 18 பாடகர்கள் உட்பட திறமைமிக்க பன்னாட்டு கலைஞர்களின் குரல்களில் ஒலித்திடும் குறளமுதமாக இது திகழ்வதாக, T Lax Avenue இயக்குநர் திலா லக்ஷ்மண் தெரிவித்தார்.
தங்களின் இம்முயற்சிக்கு மலேசியத் தமிழர்களிடமிருந்தும் நல்ல வரவேற்புக் கிடைக்குமென எதிர்பார்ப்பதாக, லிடியன் நாதஸ்வரமும் அமிர்தவர்ஷினி இருவரும் செய்தியாளர் சந்திப்பில் கூறினர்.
மகனுக்கு 2 வயதிலேயே டிரம் வாசிக்கவும், பின்னர் பியானோ வாசிக்கவும் கற்றுக்கொடுத்து, இசைச் சூழலில் வளர்த்தவரான, லிடியன் நாதஸ்வரத்தின் தந்தை வர்ஷன் சத்திஷும் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார்.
“இது கலைநிகழ்ச்சி அல்ல, கல்வி மற்றும் நன்னெறி சார்ந்த ஒன்று” எனக் கூறிய டத்தோ ரவி, நிகழ்ச்சி முழுக்க முழுக்க இலவசம் என்பதால் அனைவரும் திரளாக வந்து கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.
தமிழ் இலக்கியத்தின் சுவடுகளை இசை உலகில் ஒலிக்கச் செய்யும் மறக்கமுடியாத இரவாக இது அமைம் என்பது திண்ணம்.



