
மணிலா, ஏப்ரல்-28, மத்திய பிலிப்பைன்ஸில் உள்ள புலுசான் எரிமலை இன்று காலை வெடித்துச் சிதறி, வானத்தில் 4.5 கிலோ மீட்டர் உயரத்திற்கு சாம்பலைக் கக்கியது.
இதனால் அதிகாரிகள் புலுசான் மலையில் எச்சரிக்கை அளவை உயர்த்தி, 4 கிலோ மீட்டர் அபாய மண்டலத்திற்கு வெளியே இருக்குமாறு சுற்று வட்டார மக்களை எச்சரித்தனர்.
உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 4.36 மணிக்கும் 5 மணிக்கும் இடைபட்ட நேரத்தில் எரிமலை வெடித்தது.
அதற்கு முன்பாக 24 மணி நேரங்களில் குறைந்தது 53 எரிமலை நிலநடுக்கங்களும் பதிவுச் செய்யப்பட்டன.
எரிமலையால் பாறைச் சிதறல்கள் மற்றும் பிற குப்பைகள் வெளியேற்றப்படும் ஆபத்து இருப்பதால், எரிமலையின் தெங்கிழக்குப் பகுதியில் 2 கிலோ மீட்டர் அபாய மண்டலம் வரை மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புலுசான் எரிமலை சிகரத்திற்கு அருகில் பறப்பதைத் தவிர்க்குமாறு விமானிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிலிப்பின்சில் இன்னமும் தீவிரத்துடன் உள்ள 24 எரிமலைகளில் இந்த புலுசான் எரிமலையும் ஒன்றாகும்.
அந்நாடு பசிஃபிக் நெருப்பு வளையத்தில் அமைந்துள்ளதால், அங்கு எரிமலை வெடிப்பும் நிலநடுக்கங்களும் ஏற்படுவது வழக்கமாகும்.