
கோலாலாம்பூர், ஜூலை-13-முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் முன்கூட்டியே சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டால் தாம் அமைச்சர் பதவியைத் துறக்கப் போவதாகக் கூறிய DAP நாடாளுமன்ற உறுப்பினர் ஙா கோர் மிங்கிற்கு, துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி நேரடித் கண்டனம் மற்றும் அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.
DAP தேசியத் துணைத் தலைவருமான ஙா கோர் மிங், மடானி அரசாங்கத்தில் வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சராக உள்ளார்.
இந்நிலையில், தற்போதைய ஒற்றுமை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தலைவர்கள் தங்களின் கருத்துகளை வெளியிடும்போது மிகவும் நிதானமாகவும் பொறுப்புடனும் நடந்து கொள்ள வேண்டும் என, அம்னோ தலைவருமான அவர் கேட்டுக்கொண்டார்.
_“நாம் அனைவரும் இப்போது ஒரே அரசாங்கத்தில் இணைந்து செயல்பட்டு வருவதால், ஒவ்வொரு வாரமும் அமைச்சரவைக் கூட்டத்தில் சந்திக்கும் சூழலில் இதுபோன்ற தேவையற்ற விவாதங்களை பொதுவெளியில் எழுப்ப வேண்டிய அவசியம் இல்லை”_ என அவர் சுட்டிக்காட்டினார்.
“நாம் எதிர்க்கட்சியாக இருந்திருந்தால் இத்தகைய சவால்கள் அல்லது கருத்துகள் பொருத்தமானதாக இருந்திருக்கலாம்; ஆனால், தற்போதைய ஆளுங்கட்சிச் சூழலில் இது தேவையற்றது”, எனக் குறிப்பிட்ட சாஹிட், இந்த விவகாரம் குறித்து விவாதிக்கத் தாம் நேரில் ஙா கோர் மிங்கைச் சந்திக்கவுள்ளதாகவும், அவர் தனது ஒரு நல்ல நண்பர் என்றும் தெரிவித்தார்.
ஜோகூர் மாநிலத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஒற்றுமை அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையே நிலவும் உறவு மிகவும் வலுவாகவும், தொழில்முறை ரீதியிலும் நீடிப்பதாக ஜாஹித் மேலும் உறுதிப்படுத்தினார்.
ஜோகூர் தேர்தலில் பாரிசான் நேஷனல் அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, நஜீப் ஒருவேளை விடுதலை செய்யப்பட்டால் அமைச்சரவையிலிருந்து விலகுவேன் என்ற ஙா கோர் மிங்கின் முந்தைய நேர்காணல் பெரும் அரசியல் விவாதமாக மாறியுள்ள நிலையில், துணைப் பிரதமரின் இந்தத் தலையீடு மற்றும் அறிவுறுத்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.



