
காஜாங், செப்டம்பர்-28,
காஜாங் புக்கிட் காஜாங் டோல் சாவடியில் நேற்று ஓர் ஆண் குழந்தையின் உயிரை பலிகொண்ட துயர விபத்து மீதான விசாரணைத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
விபத்துக்கு முக்கியக் காரணமான 42 வயது லாரி ஓட்டுநர், பிரேக் செயலிழப்பு காரணமாகவே லாரியிலிருந்து தாம் குதித்ததாக போலீஸில் வாக்குமூலம் அளித்துள்ளார்; எனினும், லாரி ஏப்ரல் மாதம் தான் பராமரிப்புப் பணிக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
எனவே, தற்போது நிபுணர்கள் மூலம் தொழில்நுட்ப ஆய்வு செய்யப்படுவதாகவும் போலீஸ் கூறியது.
இந்நிலையில், ஓட்டுநர் மேல் விசாரணைக்காக 2 நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இதுவரை, லாரி உரிமையாளர் உட்பட 5 பேரிடம் வாக்குமூலம் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
விபத்தில் உயிரிழந்த குழந்தையின் தாய், பாட்டி மற்றும் இரட்டைச் சகோதரர்கள் செர்டாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
அதேசமயம், புரோட்டோன் X70 கார் பயணி ஒருவர் காஜாங் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
JKR எனப்படும் பொதுப் பணித் துறையின் 2 ஊழியர்கள் காஜாங் மருத்துவமனையில் இன்னமும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அந்த பழைய சாமான்களை ஏற்றி வந்த லாரியின் பிரேக் பிடிக்காமல் போனதே, 4 வாகனங்கள் சம்பந்தப்பட்ட அவ்விபத்துக்குக் காரணம் என முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
ஒரு வயது குழந்தை உயிரிழந்த வேளை, மேலும் 8 பேர் அதில் காயமடைந்தனர்.