
குவாலா கெடா, ஜனவரி 29 – குவாலா கெடா, Kampung Masjid Lama, Jalan Kilang Baja பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், ஒரு வீடும் மளிகைக் கடையும் முற்றாக எரிந்து நாசமானது. இச்சம்பவத்தில் 35,000 ரிங்கிட் ரொக்கப் பணமும் தீயில் கருகி உரிமையாளருக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டு உரிமையாளர் கடைக்கான சரக்குகளை வாங்கச் சேமித்து வைத்திருந்த பணத்தை மீட்க முடியவில்லை என தெரிவித்திருந்தார். அந்த பணம் பிளாஸ்டிக் மூட்டையில் கட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில், தீ விபத்தில் முழுவதுமாக எரிந்துவிட்டதாக அவர் மேலும் கூறினார்.
நேற்று இரவு சுமார் 8 மணியளவில் ஏற்பட்ட இந்த சம்பவத்தின் போது, வீட்டின் உரிமையாளரும், அவரது கணவரும் மற்றும் அவரது இளைய மகனும் வீட்டின் கீழ்தளத்தில் இருந்துள்ளனர். தொழுகைக்குப் பிறகு மேல்தளத்தில் இருந்து கடும் புகை மற்றும் வெடிச்சத்தம் கேட்டதால், அவர்கள் உடனடியாக வெளியேறி உயிர் தப்பினர்.
இந்த தீ விபத்தில் வீட்டு உரிமையாளருடைய சகோதரியின் வீடும் தீக்கிரையானதுடன், நகைகளும் தீயில் நாசமானதாக கூறப்பட்டது. நீர் அழுத்தம் குறைவாக இருந்ததால் தீ வேகமாக பரவியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான தகவல் கிடைக்கப்பெற்றவுடனேயே கெடா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணி வேளைகளில் ஈடுபட்டு தீயை முழுமையாக கட்டுப்படுத்தினர்.
25 ஆண்டுகளாக நடத்தி வந்த வீடும் கடையும் இழந்தபோதிலும், குடும்பத்தினர் உயிருடன் தப்பியதற்கு நன்றியுடன் இருப்பதாக அவ்வீட்டின் உரிமையாளர் கூறினார்.



