
குவாலா திரங்கானு, ஜனவரி-31, குவாலா திரங்கானு பந்தாய் பத்து பூரோக் டுவா கடற்கரை அருகே, மனித எலும்புக்கூடுகள் என நம்பப்படும் 34 துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றிரவு 10 மணியளவில் பொது மக்களிடமிருந்து அது குறித்து தகவல் கிடைத்ததாக, மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் Azli Mohd Noor தெரிவித்தார்.
இதையடுத்து, திரங்கானு குற்றப்புலனாய்வுத் துறையின் தடயவியல் பிரிவு சம்பவ இடம் விரைந்தது.
JKR குடியிருப்புக்குப் பின்னால் கைவிடப்பட்ட புதர்ப் பகுதியில் அந்த எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
மேற்கொண்டு சோதனை செய்வதற்காக, உடற்கூறு மற்றும் இரசாயனத் துறைக்கு அவை அனுப்பப்பட்டன.
எலும்புகள் கண்டெடுக்கப்பட்ட இடத்தருகே பழைய சுடுகாடு எதுவும் இருக்கின்றதா அல்லது அது தனியாருக்குச் சொந்தமான நிலமான என்பதும் விசாரிக்கப்படுகிறது.
மருத்துவ மற்றும் இரசாயன பரிசோதனையின் முடிவுகளுக்குப் பிறகே, பாலினம், இறந்த காலக் கட்டம் உள்ளிட்ட விவரங்கள் தெரிய வருமென, Azli கூறினார்.
தற்சமயத்திற்கு திடீர் மரணம் என அச்சம்பவம் வகை படுத்தப்பட்டுள்ளது.
எனவே, பொது மக்கள் யூகங்களைக் கிளப்பி விசாரணைக்கு இடையூறாக இருக்க வேண்டாமென அவர் கேட்டுக் கொண்டார்.