
சிங்கப்பூர், ஜனவரி-24, மலேசியாவிலிருந்து கள்ளத்தனமாக இறக்குமதி செய்யப்பட்ட 860 கிலோ கிராம் புத்தம் புதியக் காய்கறிகள், சிங்கப்பூரில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
காய்கறிகளை ஏற்றியிருந்த அந்த சரக்கு லாரி துவாஸ் சோதனைச் சாவடியில் சிக்கியது.
சரக்கு அறிவிப்பில் முரண்பாடுகள் இருந்ததால் சந்தேகம் கொண்ட குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடி அதிகாரிகள், மேற்கொண்டு பரிசோதனை செய்ய ஏதுவாக SFA எனப்படும் சிங்கப்பூர் உணவு நிறுவனத்தை நாடினர்.
SFA சோதனையில், கடுகுக் கீரை, சாலட், புதினா இலை உள்ளிட்டபல காய்கறிகள் அறவே அறிவிக்கப்படவில்லை அல்லது இருப்பதை விட குறைவாக அறிவிக்கப்பட்டது கண்டறியப்பட்டது.
இதையடுத்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.
சிங்கப்பூரில், உணவு இறக்குமதிக்கு SFA-வின் அங்கீகாரம் அவசியமாகும்.
சட்டப்பூர்வமான இறக்குமதியாளர்கள் மட்டுமே உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியும்; அதுவும் இறக்குமதி செய்யப்படும் ஒவ்வொரு பொருளும் முறையாக அறிவிக்கப்படுவதோடு இறக்குமதி சான்றிதழும் காட்டப்பட வேண்டுமென்பது விதிமுறையாகும்.
அதனை மீறி பழங்களையும் காய்கறிகளையும் இறக்குமதி செய்தால் 10,000 சிங்கப்பூர் டாலர் அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் சிறையை எதிர்நோக்க வேண்டி வரும்.